திருப்புளியங்குடி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்

வைகுண்டம், மார்ச் 19: நவதிருப்பதிகளில் 3வது திருப்பதியான திருப்புளியங்குடி  காய்சினி வேந்தப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று  (18ம் தேதி) துவங்கியது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் 3வது திருப்பதியான திருப்புளியங்குடி காய்சினி வேந்தப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவத் திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (18ம் தேதி) துவங்கியது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு கொடிபட்டத்தை பக்தர்கள் ரதவீதிகளில் ஊர்வலமாக  எடுத்து வந்தனர். கோயிலை வந்தடைந்ததும் கொடிமரம் முன் உற்சவர் காய்சினி  வேந்தப்பெருமாள் எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.  இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.

Advertising
Advertising

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை மற்றும் கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடக்கிறது. 5ம் திருவிழாவையொட்டி வரும் 22ம் தேதி காலை 9மணிக்கு பெருமாள் பல்லக்கில் மாடவீதி புறப்பாடும் காலை 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், நாலாயிர திவ்விய பிரபந்த தீர்த்த விநியோக கோஷ்டியும் நடைபெறும். இரவு 8 மணிக்கு கருடவாகனத்தில் தேவி, பூமிதேவியருடன் சுவாமி காய்சினிவேந்தப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கோயிலை வந்தடைந்த பின்னர் மஹா தீபாராதனை நடைபெறும்.  ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கணேஷ்குமார், ஆய்வாளர் நம்பி, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் செய்துள்ளனர்.

Related Stories: