×

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியும் தெர்மல் கருவிக்கு கடும் தட்டுப்பாடு

வேலூர், மார்ச் 19: கொரோனா பாதிப்பு கண்டறியும் தெர்மல் கருவிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள், பயணிகள், டிரைவர்கள் உள்ளிட்டவர்களை எல்லைகளில் ‘தெர்மல்’ எனப்படும் லேசர் ஒலி மூலம் உடல் வெப்ப நிலையை கண்டறியும் கருவியை கொண்டு சோதனை செய்யப்படுகிறது. ஆனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி ஆந்திர எல்லையையொட்டி அமைந்துள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதித்தாலும், வாகனத்தில் வருவோரை தெர்மல் கருவி மூலம் சோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தெர்மல் கருவிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக தெர்மல் கருவிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது இருப்பில் உள்ள ஒரு சில கருவிகளை கொண்டு ரயில் நிலையம், கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை செய்து வருகிறோம். மேலும் அதிகளவு கருவிகள் தேவைப்படுகிறது.

இதுகுறித்து சென்னையில் பேசியுள்ளோம். அங்கிருந்து கருவிகள் வந்தவுடன் அவற்றை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இருப்பினும் தற்போது வரை மாவட்ட எல்லைப்பகுதியில் அனைத்து வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்த பிறகே அனுமதிக்கிறோம். வாகனத்தில் வருவோரை கண்காணித்து அவர்களுக்கு ஏதேனும் காய்ச்சல் உள்ளதா? எனவும் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். போர்க்கால நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்திற்கு தேவையான தெர்மல் கருவிகளை அரசு உடனடியாக வழங்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : district ,Vellore ,
× RELATED கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு...