×

சென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்

பெரம்பூர்: வடசென்னை பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக  சில மருந்தகங்கள் மாஸ்க், கிருமி நாசினி பொருள்களை அதிக விலைக்கு விற்கின்றன. இதனால் கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகரித்து தற்போது தமிழகத்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக பல்வேறு வணிக நிறுவனங்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் வெளியே செல்ல தயங்குகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி திரவங்களை மக்கள் அதிக அளவில் வாங்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அந்த பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 இதை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொடுங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான மருந்தகங்களில் சராசரியாக பயன்படுத்தப்படும் முக கவசத்தின்  விலையை பத்து மடங்கு உயர்த்தி ₹3க்கு விற்கப்பட்ட முக கவசம் தற்போது 30க்கும், 220 முதல் 300 வரை விற்கப்பட்டு வந்த  கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி பொருட்கள் தற்போது கூடுதலாக 330 முதல் 450 வரை விற்கின்றனர்.

இந்த பொருட்களுக்கு எதற்கும் பில் தரவும் மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   இதுகுறித்து மருந்தகங்களின் நிர்வாகிகள் கூறுகையில், “எங்களுக்கு வரும் விலையே  தற்போது அதிகமாக உள்ளது. அதனால் அதே விலைக்கு தான் விற்கிறோம். நீங்கள்  கம்பெனிகளிடம் சென்று கேளுங்கள். ஏனென்றால் கடும் தட்டுப்பாடு உள்ளது” என பதிலளிக்கின்றனர். இது சம்பந்தமாக பலர் தங்களது புகார்களை சுகாதாரத்துறைக்கு அனுப்பி உள்ளனர். உடனடியாக வடசென்னையில் அதிகாரிகள் ஆய்வு செய்து பில் இல்லாமல் தரப்படும் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Corona ,Chennai ,
× RELATED சீரம் நிறுவனம் ரூ.502 கோடி நிதி கொரோனா...