×

அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை


˜ * வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
˜ * மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல்   தடுப்பு  நடவடிக்கைகளுக்காக  பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள் மட்டுமே மூட உத்திரவிடப்பட்டுள்ளதாகவும்,  அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மளிகை கடைகள், பால் கடைகள் மற்றும் காய்கறி கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும்  ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசின் உத்திரவின்படி அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், அனைத்து அங்கன்வாடி மையங்கள், மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவை 31.03.2020 வரை மூட உத்தவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அத்தியாவச தேவைகளை பூர்த்தி செய்யும் மளிகை கடைகள், பால் கடைகள், மருந்தகங்கள்,  காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த கடைகள் வழக்கம் போல இயங்கும்.  குறிப்பாக கோயம்பேடு காய்கனி அங்காடி மூடுவதற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி கோயம்பேடு காய்கனி அங்காடி பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கடைகள் வழக்கம் போல் இயங்கவும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இவ்விடங்களுக்கு வருகைபுரியும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படா வண்ணம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் பொதுமக்களுக்கு நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களும் அரசின் அறிவுரைகளை பின்பற்றி சுய பாதுகாப்போடு சென்றுவர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மளிகை கடைகள், பால் கடைகள், மருந்தகங்கள்,   காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்படும் என தவறான வதந்திகள் சமூக வலைதளங்களில்  பரப்பப்பட்டு வருகின்றன. இது போன்ற  வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது போன்ற தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : shops ,
× RELATED வேலூர் மாவட்ட எல்லையில் 5 மதுக்கடைக்கு...