×

மாநகராட்சியில் ரூ.5.36 கோடி உபரி பட்ஜெட் வெளியீடு

திருப்பூர், மார்ச் 19: திருப்பூர் மாநகராட்சியின் 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று வெளியிடப்பட்டது. மொத்த வருமானம் ரூ.1337 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரம் எனவும், மொத்த செலவு ரூ.1331 கோடியே 78 லட்சத்து 25 ஆயிரம் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5 கோடியே 36 லட்சத்து 62 ஆயிரம் உபரி நிதியாக காட்டப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான சிவகுமாரிடம் 2020-2021ம் ஆண்டுக்குரிய வரவு செலவு அறிக்கையை உதவி ஆணையர் (கணக்கு) சந்தான நாராயணன் நேற்று சமர்ப்பித்தார். இந்த பட்ஜெட் அறிக்கையின் முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டி மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:  

 திருப்பூர் மாநகராட்சிக்கு வருவாய் மற்றும் மூலதன வரவு இன வகையில் வருவாய் நிதி ரூ.601 கோடியே 69 லட்சத்து 70 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் குடிநீர் வடிகால் வகையில் வருவாய் ரூ.729 கோடியே 36 ஆயிரம் ஆகும். கல்வி நிதி வருவாய் ரூ.6 கோடியே 44 லட்சத்து 81 ஆயிரம். இந்த மூன்று இனங்களின் மொத்த வருவாய் ரூ.1337 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரம் என உத்தேசிக்கப்பட்டு உள்ளது.  அதே சமயம் வருவாய் மற்றும் மூலதன வகையில் செலவு ரூ.597 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம், குடிநீர் வடிகால் வகையில் செலவு ரூ.728 கோடியே 32 லட்சம், கல்வி நிதி செலவு ரூ.6 கோடியே 42 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த செலவு ரூ.1331 கோடியே 78 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாயைக் காட்டிலும் செலவு குறைவாக உள்ளது. உபரி நிதியாக ரூ.5 கோடியே 36 லட்சத்து 62 ஆயிரம் வரும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

குறிப்பாக அம்ருத் திட்டத்தில் நான்காவது குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் மிடுக்கான நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் ஆகிய பணிகள் இந்த ஆண்டு நடைபெற்று வருகின்றன.  மிடுக்கான நகரத் திட்டப் பணிகளை நிறைவேற்றும் தரப்பட்டியலில் திருப்பூர் மூன்றாவது இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மிடுக்கான நகரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 28 திட்டப் பணிகளில் 24 பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  ராயபுரம், ராயபுரம் கிருஷ்ணன் கோவில், புதுநகர் காலனி, ஜெஜெநகர் ஆகிய 4  பூங்கா பணிகள் நிறைவடைந்துவிட்டன. இது தவிர பழைய பேருந்து நிலையத்தை இன்று (நேற்று) கோயில்வழி தற்காலிகப் பேருந்து நிலையத்திற்கு மாற்றிவிட்டு அங்கு மிடுக்கான நகரத் திட்டப் பணிகளைத் தொடங்க முடிவு செய்திருந்தோம்.  னினும் கோவையில் இருந்து அரசுப் போக்குவரத்து ஆணையர் நேரில் ஆய்வு செய்ய வந்ததால் பணி தொடங்கப்படவில்லை. விரைவில் இப்பணி தொடங்கப்படும்.

 அதேபோல் தினசரி சந்தையையும் இடமாற்றம் செய்துவிட்டு மிடுக்கான நகரத் திட்டப் பணியை இன்று (நேற்று) தொடங்க உத்தேசித்திருந்தோம். இப்பணியும் உடனடியாகத் தொடங்கப்படும். புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் அனைத்து வசதிகளுடன் நவீன முறையில் மாற்றி அமைக்கப்படும். கோயில்வழி தற்காலிகப் பேருந்து நிலையம் நிரந்தர பேருந்து நிலையமாக மாற்றப்படுமா? என்பது பிறகு தீர்மானிக்கப்படும். திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டப் பணிகள் இந்த ஆண்டுக்குள் 50 சதவிகிதம் பணி நிறைவடையும். 2022-ம் ஆண்டு இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும். தற்போது நகரில் முதலாவது திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது குடிநீர் திட்டம் மூலம் 116 எம்எல்டி குடிநீர் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதில் இரண்டாவது திட்ட பிரதான குழாயில் பல்வேறு இடங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.

அவிநாசி வழியாக வரக்கூடிய 8 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த குழாயில் 3 கி.மீட்டர் தூரம் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. 5 கி.மீட்டர் தூரம் குழாயைப் புதுப்பிப்பதற்கு முன்மொழிவு தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அப்பணி நடைபெறும்.  பிறகு குடிநீர் குழாய் உடைப்பு, நீர்க்கசிவுப் பிரச்சனை தீரும். இது தவிர 2015-16-ம் நிதியாண்டில் நகரில் 26 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 4 தரைமட்டத் தொட்டிகள் மற்றும் 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு கூடுதல் கன அளவுள்ள விநியோக குழாய்களை அமைத்தல் ஆகிய பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான்காவது திட்டம் நடைமுறைக்கு வரும்போது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கால இடைவெளி 3-5 நாட்கள் என்பது ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது தினமும் குடிநீர் வழங்கும் நிலை உருவாகும்.

இத்துடன் அம்ரூத் திட்டத்தில் 604 கோடியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் திட்டப் பணியும் நான்கு பகுதிகளாக நடைபெறுகிறது. ச.பெரியபாளையம், சின்னாண்டிபாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்படும். மாநகரின் 60 வார்டுகள் மொத்தம் 17 பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு 14 பகுதிகளில் இந்த பாதாள சாக்கடை திட்ட கட்டுமான பணி நடக்கிறது. விடுபட்ட 10, 11, 12-வது இடங்களுக்கும் பாதாளச் சாக்கடைக் கொண்டு வர விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. இந்த பணியும் விரைவில் நடைபெறும். இதன் மூலம் மாநகரில் 74 ஆயிரத்து 860 வீட்டு பாதாளச் சாக்கடை இணைப்புகள் கொடுக்கப்பட்டு கழிவுநீரைச் சேகரித்து சுத்திகரிக்கப்படும். இப்பணி 2022-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும்.

திருப்பூரில் 28 இடங்களில் வீடுகளில் இருந்து திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு ஈரமான கழிவுகள், உலர் கழிவுகள் என பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மைக் கூடங்கள் அமைக்கப்படும். ஈரக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். உலர் கழிவுகளை சேகரிக்கும் துப்புரவுப் பணியாளர்களே அதை விற்று காசாக்கிக் கொள்ளலாம். தவிர சிமெண்ட் ஆலைகளுக்கு அந்த உலர் கழிவுகளை அனுப்புவோம். இ வேஸ்ட் எனப்படும் மின்னணுக் கழிவுகளை சேகரிப்பதற்கு தனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள், கட்டமைப்புப் பணிகள் வேகமாக செயல்படுத்தப்படுகின்றன. இப்பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார். உடன் மாநகராட்சிப் பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் சபியுல்லா, உதவி ஆணையர் (கணக்கு) சந்தான நாராயணன், உதவி ஆணையர் (வருவாய்) தங்கவேல் ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : corporation ,
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...