×

பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்தவர் டாக்டர் அலட்சியத்தால் மூதாட்டி சாவு? மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

ராஜபாளையம், மார்ச் 19: ராஜபாளையம் அருகே உள்ள வரகுணரமபுரத்தை சேர்ந்தவர் மலைச்சாமி மனைவி நாகம்மாள்(65). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்பொழுது நல்லபாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அருகில் வேலை பார்த்தவர்கள் பாம்பை பிடித்து ஒரு பையில் போட்டுக்கொண்டு நாகம்மாளை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மதியம் 2 மணியளவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த சமயத்தில் செவிலியர்கள் மட்டுமே முதலுதவி செய்து சிகிச்சை அளித்தனர். மாலை 5 மணியளவில் வந்த டாக்டர், நாகம்மாளை சோதித்துவிட்டு உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவரை கண்டித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர், உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, மருத்துவமனையில் மருத்துவர் இருந்துகொண்டு சிகிச்சை அளிக்க வராததை கண்டித்து உறவினர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags : Snake bite treatment doctor ,siege ,hospital ,
× RELATED அதிகாரிகள் அலட்சியத்தால் நீண்ட நாளாக மூடிகிடக்கும் பஞ்சாயத்து அலுவலகம்