×

கஞ்சநாயக்கன்பட்டியில் டெண்டர் எடுத்தும் ரோடு போடவில்லை பணிகள் தொடங்குவது எப்போது?

அருப்புக்கோட்டை, மார்ச் 19: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி உள்ளது. இங்குள்ள நான்குவழிச்சாலையில் இருந்து ராமசாமிபுரம் வழியாக அருப்புக்கோட்டை செல்ல 1 கி.மீ தூரம் உள்ளது. இந்த ரோடு வழியாக தான் ராமசாமிபுரத்தில் இருந்து மில் வேலைக்கு செல்பவர்கள் கஞ்சநாயக்கன்பட்டி வழியாக சென்று வருகின்றனர். இந்த ரோடு வழியாக தான் ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, ஜெயராம் நகர், கணேஷ்நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து புறநகர் பகுதி மக்கள் நகருக்குள் செல்லாமல் அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், டவுண் போலீஸ் ஸ்டேசன், நகராட்சி அலுவலகம், கருவூலகம், பள்ளிகள், வங்கிகள் ஆகிய இடங்களுக்கு விரைவாக செல்கின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் சைக்கிள் மற்றும் நடந்தும் செல்வர். முக்கியமான இந்த ரோட்டில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து பள்ளங்களாக மாறிவிட்டது. வாகனங்கள் செல்ல முடியாத அளவில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர், பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் சைக்கிள்கள் டயர் பஞ்சராகி விடுகிறது. இதனால் இந்த ரோட்டை பயன்படுத்துவோர் காந்திநகர் திருச்சுழி ரோட்டின் வழியாக நகருக்குள் செல்ல வேண்டி உள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ரோட்டை புதியதாக அமைக்க கோரி பல வருடங்களாக மக்கள் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை.

இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு 750 மீ தொலைவில் உள்ள இந்த ரோட்டிற்கு 17 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ரோடு போடும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர் இதுவரை சாலை அமைப்பதற்குரிய எந்தவொரு பணியும் துவங்கவில்லை. பணிகள் விரைவில் துவங்கி சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kanjayanakanpatti ,
× RELATED கல்லட்டி மலைப்பாதையில் சாலை விரிவாக்க பணி மும்முரம்