×

வெள்ளவேடு பாலத்தில் கொட்டப்பட்டிருந்த இறைச்சி கழிவுகள் அகற்றம்

திருவள்ளூர், மார்ச் 19: ‘’தினகரன்’’ செய்தியின் எதிரொலியால், வெள்ளவேடு, மேல்மணம்பேடு பாலத்தில் கொட்டப்பட்டிருந்த கோழி இறைச்சி, மீன் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டது.  திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் வெள்ளவேடு ஊராட்சி உள்ளது. இங்கிருந்து மேல்மணம்பேடு திரும்பும் வளைவில் தரைப்பாலம் உள்ளது. இங்கு கோழி இறைச்சி, மீன் கடை மற்றும் ஏராளமான காய்கறி கடைகள் உள்ளன. இங்கு சேரும் கழிவுகளை சிலர் தரைப்பாலத்தில் கொட்டுகின்றனர். இதை, அங்கு சுற்றித்திரியும் பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து கிளறுகின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசி வந்தது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்தது.

இதுகுறித்து கடந்த 16ம் தேதி ‘’தினகரன்’’’’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர் சத்யபிரியா முரளிகிருஷ்ணன், வெள்ளவேடு ஊராட்சி தலைவர் துர்கா கோபிநாத், மேல்மணம்பேடு ஊராட்சி தலைவர் நிறைமதி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, இறைச்சி மற்றும் மீன் கழிவுகள், குப்பை கழிவுகளை அகற்றினர். மேலும், தொற்று நோய் பரவுவதை தடுக்க கிரிமி நாசினி மருந்து தெளித்தனர்.


Tags : Flood Bridge ,
× RELATED ஆவுடையார்கோவில் அருகே 57 ஆண்டுகளை...