×

பழவேற்காட்டில் இருந்து பாலிகீட்ஸ் புழுக்கள் கடத்த முயற்சி 4 பேரை சுற்றிவளைத்த பொதுமக்கள்

பொன்னேரி, மார்ச் 19: பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாலிகீட்ஸ் புழுக்களை கடத்த முயன்ற 4 பேரை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி அடுத்த அவுரிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பழவேற்காடு ஏரி உள்ளது. இங்கிருந்து வனத்துறையினரால் தடைசெய்யப்பட்ட அரியவகை பாலிகீட்ஸ்  செம்புழுக்களை பிடித்து சிலர் ஆந்திர மாநிலத்திற்கு கடத்துகின்றனர்.  இதனால் அந்த பகுதியில் இறால் மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. வெளிநாட்டு பறவை இனங்கள் இரையின்றி  பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழவேற்காடு  வனத்துறையினரிடம் அப்பகுதி மீனவர்கள் புகார் செய்தனர். ஆனால், வனத்துறை தரப்பில் நடவடிக்கை இல்லை என தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்,  பாலிகீட்ஸ்  புழுக்களை நேற்று கடத்த முயன்ற பழவேற்காடு பகுதியை சேர்ந்த  எல்லையன், மாலிக், அசார், ஜாபர் ஆகியோரை பிடித்து  வனத்துறையிடம்  ஒப்படைத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் தயக்கம் காட்டியதாக  கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினரிடம் மீனவ கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு 4 பேரையும் விசாரணைக்காக வனத்துறையினர் அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்த ரூபாய் பல லட்சம் மதிப்புள்ள பாலிகீட்ஸ் புழுக்களை பறிமுதல் செய்து, ஏரிப்பகுதி சேற்றில் விட்டனர்.

 இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், பழவேற்காடு ஏரிப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் அரியவகை பாலிகீட்ஸ் செம்புழுக்கள் கிடைக்கிறது. இவற்றை உண்பதற்காக வெளி நாட்டில் இருந்து ஏராளமான பறவைகள் வருகிறது. அது மட்டுமின்றி அப்பகுதி இறால் பண்ணைகளில் இந்த புழுக்களை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த புழுக்களை சிலர் பிடித்து கிலோ ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை விற்கின்றனர். இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளுக்கு உணவு கிடைக்காததால் வனத்துறையினர், பாலிகீட்ஸ் புழுக்களை பிடிக்க தடை விதித்துள்ளனர். ஆனாலும் சிலர் வனத்துறையை சேர்ந்த சிலரது உதவியுடன் பாலிகீட்ஸ் புழுக்களை பிடித்து விற்கின்றனர். அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம் என்றனர்.

Tags : civilians ,Pulicat ,
× RELATED ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில்...