×

இலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை

வாலாஜாபாத், மார்ச் 19: வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு ஊராட்சி முதல் ராஜகுளம் வரை சாலையில் ஜல்லிக்கற்ககள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லயக்கற்ற சாலையாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், இ-சேவை மையம் உள்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் நூற்றுக்கணக்கானோர், ராஜகுளம் பஸ் நிறுத்தம் சென்று, காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், பெரும்புதூர் உள்பட பல்வேறு நகர் பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சென்று வருகின்றனர்.இலுப்பப்பட்டு ஊராட்சியில் இருந்து ராஜகுளம் வரை செல்லும் கூட்டு சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில், ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறிவிட்டது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள், ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.

சாலைகளில் ஏராளமான பள்ளங்கள் உள்ளதால், பைக் மற்றும் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை விழுந்து எழுந்து செல்லும் சம்பவம் தினமும் நடக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக, பல்வேறு துறை அதிகாரிகளிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் தார் சாலையாக புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு ஊராட்சியில் இருந்து ராஜகுளம் வரை செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகிறோம். பெரும்பாலானோர் தொழிற்சாலைகள் பணி முடித்து நள்ளிரவில் வீடு திரும்புவார்கள். இதுபோல் வருபவர்கள், குண்டும் குழியுமான பள்ளங்களில் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். ஒரு சில நேரங்களில் வாகனங்கள் பஞ்சராகி தள்ளிக் கொண்டே வீடு திரும்பும் அவலநிலையும்  நடக்கின்றன. இந்த பிரச்னையை தீர்க்க, ஒன்றிய நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து தர நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Tags : pit ,
× RELATED காளையார்கோவிலில் மயானம் செல்லும் வழியில் குழி ெபாதுமக்கள் அவதி