×

45 ஆண்டுகளாக சிமென்ட் சீட் கட்டிடத்தில் செயல்படும் வட்டார கல்வி அலுவலகம்

வாலாஜாபாத், மார்ச் 19: வாலாஜாபாத்தில், 45 ஆண்டுகளாக சிமென்ட் சீட்டில் செயல்படும் வட்டார கல்வி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கொடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் நடுநிலைப் பள்ளி, ஒன்றிய பள்ளி, நிதி நாடும் பள்ளி என 114 பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஆசிரியர்களுக்காக வாலாஜாபாத் வட்டார வேளாண்மை அலுவலகம் அருகில் வட்டார கல்வி அலுவலகம் செயல்படுகிறது. இதில் 2 வட்டார கல்வி அலுவலர்கள், 15 அலுவலக ஊழியர்களும் உள்ளனர்.இந்த அலுவலகத்தில் ஆசிரியர்களின் பணிப்பதிவேடு, பள்ளி குறிப்புகள் உள்பட பல்வேறு ஆவணங்கள் பராமரிக்கப்படுகின்றன. சிமென்ட் சீட் கூரையால் அமைக்கப்பட்டு, கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வட்டார கல்வி அலுவலகம் இயங்குகிறது.  இக்கட்டிடத்தில் உள்ள சிமென்ட் ஷீட்டில், தற்போது ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் ஆசிரியர்களின் கோப்புகளை பாதுகாப்பது கேள்விக்குறியாக உள்ளது என அங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த அலுவலகம் சுற்றி முட்புதர்கள் சூழ்ந்துள்ளதால், அலுவலக ஜன்னல் வழியாக அடிக்கடி சர்வ சாதாரணமாக பாம்பு உள்பட பல்வேறு விஷ பூச்சிகளும் வந்து செல்வதாக கூறப்படுகிறது. ஒரு சில நேரங்களில் பாம்புகளை கண்டு ஊழியர்கள் அலறியடித்து கொண்டு, வெளியே ஓடும் சம்பவமும்ம் இங்கு தொடர்கதையாக உள்ளது. அரசு சார்பில் இந்த வட்டார கல்வி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் சார்பிலும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பிலும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிமீ தூரத்தில் வட்டார கல்வி அலுவலகம் செயல்படுகிறது. வேலை தினமும் பள்ளி பணிகளுக்காக செல்கிறோம். அப்படி செல்வதற்கு, பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ₹30 கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டும். பஸ் நிலையம் அருகிலேயே புதிய வட்டார கல்வி அலுவலகம் இருந்தால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்து, இந்த வட்டார கல்வி அலுவலகத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Regional Education Office ,
× RELATED ஆந்திராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 45 பேர் உயிரிழப்பு