×

கேளம்பாக்கம் அருகே பரபரப்பு தொழிலதிபர் வீட்டை உடைத்து ₹25 லட்சம், 40 சவரன் கொள்ளை

திருப்போரூர், மார்ச் 19: கேளம்பாக்கம் அருகே தொழிலதிபர் வீட்டை உடைத்து 40 சவரன் நகை, ₹25 லட்சத்தை வடமாநில ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னைப் புறநகர் பகுதியான கேளம்பாக்கம் அருகே கழிப்பட்டூர் மேட்டுத் தெருவை வசிப்பவர் கார்த்திக் (32). தொழிலதிபர். இவர், ஏராளமான லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் வைத்துள்ளார். மேலும், வீடு கட்டும் பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. கார்த்திக்கின் தம்பி முரளி, அதே பகுதியில் வசிக்கிறார். அப்பகுதியில் உள்ள பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான இவருக்கு கடந்த 2019 மே மாதம் திருமணம் ஆனது. கடந்த மாதம் சுகன்யாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள, மாமியார் வீட்டுக்கு சுகன்யாவை அனுப்பினார். கடந்த 14ம் தேதி காலை, சுகன்யாவுக்கு குழந்தை பிறந்ததாக வந்தது. இதையடுத்து கார்த்திக் தனது தாயுடன், வேலூருக்கு சென்றார். அங்கு மனைவி, குழந்தையை பார்த்து விட்டு மாமியார் வீட்டில் தங்கினார்.

இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் முரளி, கார்த்திக் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதைத்தொடர்ந்து வேலூரில் இருந்த கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பீரோ மற்றும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த ₹25 லட்சம், 40 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தகவலறிந்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், மாமல்லபுரம் டிஎஸ்பி (பொறுப்பு) அருள்மணி, கேளம்பாக்கம் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த ரேகைகளை சேகரித்து சென்றனர். தொடர்ந்து போலீசார், வீட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். அப்போது, அனைத்து பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்து. அதையும் மீறி நடந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், முகத்தை துணியால் சுற்றியபடி 3 பேர் இரும்பு ராடு போன்ற ஆயுதங்களுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைவது பதிவாகி இருந்தது. மேலும், 3 பேரின் நடவடிக்கைகளும், அவர்கள் பேசிக் கொள்ளும் முறையும் வட மாநிலத்தவரை போல் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஊராட்சி செயலர் வீடும் தப்பவில்லை
திருப்போரூர் அருகே காயார் அடுத்த ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (40). காயார் ஊராட்சி செயலாளர். கடந்த 16ம் தேதி மதியம் ரகுபதி, திருச்செந்தூர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று காலை அனைவரும் விடு திரும்பினர். வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர் அப்போது, பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுைழந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 5 சவரன் நகைகள், ₹2 லட்சம், அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது ெதரிந்தது.புகாரின்படி காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காயார் பகுதியில் நடந்த 2 திருட்டு சம்பவங்களிலும் இதுவரை கொள்ளையர்களை, போலீசார் பிடிக்கவில்லை. ஆள் அரவமற்ற கிராம பகுதியில் வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்றிருப்பதை அறிந்து கொள்ளை நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசீது கேட்பதால் நகை மதிப்பு குறைவு...
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொள்ளை போன நகைகள் மற்றும் ரொக்கத்தின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். போலீசார் நகைகளுக்கு ரசீது கேட்பதால் குறைத்து சொல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, போலீசார் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டும்.கழிப்பட்டூரை ஒட்டி சிறுசேரி மென்பொருள் பூங்கா உள்ளது. இங்குள்ள கட்டுமானப் பணிகளில் ஈடுபட வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு தங்கியுள்ளனர். இவர்கள்தான் வெளியூருக்கு செல்பவபர்கள், அதிக பண புழக்கத்தில் உள்ள தொழிலதிபர்களை நோட்டமிட்டு, தகவல் சொல்கின்றனர். இதன் பிறகே திட்டமிட்டு ஒரு கும்பல் கொள்ளையடித்து செல்கிறது. ஆகவே, வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் கட்டாயமாக  அடையாள அட்டை கொடுத்து, அவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றனர்.

Tags : robbery ,house ,Kelambakkam ,businessman ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்