×

கொரோனா பாதிப்பு எதிரொலி சிக்கன் விலை குறைந்தது ஆட்டிறைச்சி விலை விர்ர்...

தேனி, மார்ச் 19: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் மத்தியில் சிக்கன் சாப்பிடும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் ஆட்டிறைச்சியின் விலை அதிகரித்துள்ளது. சிக்குன்குனியா, டெங்கு, பறவைக் காய்ச்சல் என எந்தவொரு வைரஸ் காய்ச்சல் பரவினாலும் பண்ணைகளில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழி உண்பதாலேயே இந்நோய் பரவுவதாக பொதுமக்கள் மத்தியில் பெரும்பாலும் நம்பப்படுகிறது. தற்போது உலகநாடுகளை கொரோனா வைரஸ் நோயானது அச்சுறுத்தி வருகிறது. இதன்பாதிப்பு இந்தியாவில் உருவாகி உள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் இப்பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கேரளாவிற்கான உணவு விளைபொருள்கள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் பறவைக்காய்ச்சலும் ஒருசேர உள்ளது. இதனால் அண்டைய மாநிலமான தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினை தவிர்க்க பிராய்லர் சிக்கன் வாங்குவதை 80 சதவீதம் பேர் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் கிலோ ரூ.135 வரை விற்கப்பட்டு வந்த பிராய்லர் சிக்கன் தற்போது கிலோவிற்கு ரூ.70 முதல் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிராய்லர் சிக்கன் விலையை வியாபாரிகள் குறைந்துவிட்ட நிலையிலும் சிக்கன் வாங்குவதில் பொதுமக்கள் அர்வமில்லாமல் அச்சத்தில் உள்ளனர்.

இதன்காரணமாக அசைவ பிரியர்கள் ஆட்டிறைச்சிக்கு மாறியுள்ளனர். கோழிக்கறி இல்லாத நிலையில் கோழிக்கறிக்கு பதிலாக ஆட்டிறைச்சியை வாங்குவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆட்டிறைச்சிக்கு திடீரென மவுசு உயர்ந்துள்ளதால் ஆட்டிறைச்சி கடைக்காரர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிலோ ரூ.650க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டிறைச்சியின் விலையை தற்போது கிலோ ரூ.900 வரை உயர்த்திவிட்டனர். பங்குனி மாதத்தில் அதிக அளவில் கோயில்களில் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இக்கோயில் திருவிழாவின்போது அசைவம் சமைப்பதை வழங்கமாக கொண்டிருப்பதால் ஆட்டிறைச்சியின் விலையை தாறுமாறாக ஆட்டிறைச்சி கடைக்காரர்கள் உயர்த்தியிருப்பதோடு, பலவீனமான நோய்வாய்ப்பட்ட ஆடுகளையெல்லாம் அறுத்து விற்பனை செய்யும் நிலை உருவாகி உள்ளது.

தேனி நகராட்சி பகுதியில் முறைப்படி ஆடுகள் அறுக்கப்படாமல் ஆங்காங்கே தன்னிச்சையாக ஆடுகளை அறுத்து, ஆட்டின் அனைத்து பாகங்களையும் சேர்த்து கூறுகறி என்ற பெயரில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்கில் உள்ளனர். கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் தரமற்ற, பலவீனமான, நோய்வாய்ப்பட்ட ஆடுகளை அறுப்பதை சுகாதார அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கொரோனா தாக்கம் எதிரொலி: ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது