கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு

பொள்ளாச்சி, மார்ச் 19: சீனாவில் பரவ துவங்கிய கொரோனா வைரஸானது,  பல்வேறு நாடுகளில் பரவி உயிர்பலி வாங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 3 பேர் இறந்ததாக தெரிகிறது. மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில் அண்டை மாநிலமான கேரள அருகே தமிழக எல்லையில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கேரளாவிலிருந்து பொள்ளாச்சி வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதிலும், கேரள மாநிலத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி பயணிகளை ஏற்றி வரும் பஸ்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பது தொடர்கிறது. மேலும், நகர் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.

இதில் நேற்று, நகராட்சி சார்பில் மத்திய மற்றும் புதிய பஸ் நிலையங்களுக்கு வந்து சென்ற பயணிகள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது. நாளை முதல் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்படுவதாகவும், இந்த பணி இன்னும் சில வாரங்களுக்கு தொடர்ந்திருக்கும் என நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அதுபோல் பாலக்காடுரோட்டில் உள்ள உழவர் சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு, கொரோனா வைரஸ் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.  

இந்நிலையில் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவதை தடுக்கும் நடவடிக்கைக்காக, கோயில்களுக்கு வரும் பக்தர்களை காக்கும்பொருட்டு இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் காலை மற்றும் மாலை நேரத்தில், கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்திய பிறகே பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பொள்ளாச்சி சுப்ரமணியசாமி கோயில், பெருமாள்கோயில், ஊத்துக்காடு ரோடு பத்ரகாளியம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நேற்று காலையில் நடந்த சுகாதார பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது

Related Stories: