அங்கன்வாடியில் காலி பணியிடங்களால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பு

கோவை, மார்ச்.19:  கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 37 பேரூராட்சிகள் மற்றும் 12 வட்டாரங்களிலும் சேர்த்து 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 200 குறு மையங்களும் அடங்கும். இதில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியைகள் நியமனம் உள்பட அனைத்துப் பணிகளும் இதன் கீழே மேற்கொள்ளப்படுகின்றன. முதன்மை மையங்களில் குழந்தைகளுக்கு பாடம் நடத்துதல் மற்றும் உணவு சமைத்தல் ஆகியவற்றுக்காக ஒரு ஆசிரியருடன், உதவியாளர்களும், குறுமையங்களில் ஒரு ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்களில் 91 மையங்களில் ஆசிரியைப் பணியிடங்களும், 1,497 உதவியாளர் பணியிடங்களில் 190 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளன என கூறப்படுகிறது. இதனால் ஒரே ஆசிரியை 2 மையங்களை சேர்த்து கவனித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உதவியாளர்களும் 2 மையங்களில் சென்று சமைக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமும் 2 மையங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இது தவிர, டெங்கு விழிப்புணர்வு, சுகாதாரத் துறை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் அங்கன்வாடி ஆசிரியைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியைகளும், உதவியாளர்களுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கூறுகையில்,‘‘2 இடங்களுக்கு சென்று சமைக்கும்போது நேரம் மிகவும் கடினமாக இருக்கிறது. அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் 2 வயது முதல் 5 வரை உள்ளனர். இவர்களுக்கு 12 மணிக்குள் சமைத்து தயாராக வைத்திருக்க வேண்டும். இதனால் வேகவேகமாக சமைக்க வேண்டியது உள்ளது’’ என்றார். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான பணிகள் அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் உடனே மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Stories: