×

கொரோனா வைரஸ் எதிரொலி திருக்கோஷ்டியூர் கோயிலில் கிருமிநாசினி தெளிப்பு

திருப்புத்தூர், மார்ச் 19: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக கோயில் முழுவதும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது. திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற 108 வைனவத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் சுற்றுலாத்தலமாக விளங்குவதால் தினந்தோறும் ஏராளமானவர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அதை பரவாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கோயில் பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது. மேலும் கோயிலுக்குள் வரும் பக்தர்கள் கால்களை கழுவிவிட்டு வருவதற்காக கோயில் நுழைவுவாயிலில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் உள் பகுதியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என கோயில் நிர்வாகம் பரிசோதிக்காமல் கோயில் உள்ளே அனுமதிக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் பக்தர்களை சுகாதாரத்துறையினர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Tirukkothiyoor Temple ,
× RELATED கோவில்பட்டியில் ஆர்வமுடன் வாக்களித்த இளம் வாக்காளர்கள்