×

வங்கிகளில் கடன் பெற்று மகளிர் மன்றங்களில் நூதன முறையில் மோசடி

சிவகங்கை, மார்ச் 19:  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகளிர் மன்ற உறுப்பினர்களிடம் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு வங்கிகளில் கடன் பெற்று நூதன முறையில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் மன்ற குழுக்கள் உள்ளன. நேரடி அரசு கட்டுப்பாடு, தனியார் நிறுவனம், தனியார் தொண்டு நிறுவனம் கட்டுப்பாடு என பல்வேறு வகைகளில் இந்த மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் 10 பேர் முதல் சுமார் 20 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் குழுக்களுக்கு பல்வேறு வகைகளில் கடன் வழங்கப்படுகிறது.

சில தனியார் நிறுவனங்கள் நேரடியாக மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கி வாரம் ஒரு முறை நிறுவனத்தினரே குழுவினரிடம் நேரடியாக சென்று வட்டியுடன் கடனை வசூல் செய்கின்றனர். அரசு சார்பில் வழங்கப்படும் கடன் சில பகுதிகளில் வங்கி மூலம் வழங்கப்படுகிறது. சில பகுதிகளில் தொண்டு நிறுவனங்களிடம் வழங்கி அவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இப்பணத்தை வங்கிகளுக்கு திருப்பி செலுத்துவதற்கான வசூலையும் தொண்டு நிறுவனத்தினரே செய்வர். இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் குழுக்களில் உள்ள உறுப்பினர் அனைவரின் அடையாள அட்டை, ரேசன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பெறுகின்றனர்.

இதுபோல் பல்வேறு விண்ணப்பங்களில் கையெழுத்து பெறுகின்றனர். மகளிர் குழுவினரும் இது குறித்து கேள்வி கேட்பதில்லை. இவ்வாறு பெற்ற விண்ணங்களை வைத்து உறுப்பினர்களின் பெயர்களில் நிறுவனத்தினர் வங்கிகளில் பல லட்சம் கடன் பெறுகின்றனர். கடனை கட்டாத நிலை ஏற்படும் போது மகளிர்க்குழு உறுப்பினர்களுக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வாங்காத கடனுக்கு வரும் நோட்டீஸ் குறித்து வங்கியில் கேட்டால் அங்கு சரியான பதில் கிடைப்பதில்லை. இவ்வாறு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மகளிர் மன்றத்தினர் சிலர் கூறியதாவது: முதன் முதலில் மன்றம் தொடங்கும்போது உறுப்பினர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெறுவது, பல்வேறு விண்ணப்பங்களில் கையெழுத்து பெறுவதை செய்கின்றனர். இதை யாரும் பெரிதாக நினைப்பது இல்லை. சில ஆண்டுகள் கழித்து வங்கி மூலம் நோட்டீஸ் வரும்போது தான் விபரீதம் புரிகிறது. அப்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்றால் அங்கு நிறுவனமே இருப்பதில்லை. வங்கிகளில் மகளிர் மன்றத்திற்கு கடன் வழங்கும் போது சம்பந்தப்பட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வரவழைத்து நேரடியாக கெயெழுத்திட்டு வழங்க வேண்டும். நிறுவனத்திடம் வழங்குவதை நிறுத்த வேண்டும். மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ள மன்றங்கள் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மீது வங்கிகளே நேரடியாக புகார் அளித்து போலீஸ் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். வங்கியில் யாருக்கும் மோசடியில் தொடர்பில்லை என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்றனர்.

Tags : banks ,
× RELATED குறைந்த வட்டியில் வங்கி கடன்...