×

வெளிநாடு, வெளியூர்களில் இருந்து கிராமங்களுக்கு வருபவர்களை கண்காணிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

சிவகங்கை, மார்ச் 19: கொரோனா பாதிப்பால் சிவகங்கை மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் வெளிநாடு, வெளியூரிலிருந்து யார் வந்தாலும் கிராம உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் பேசினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்த 124 நபர்களுக்கு காய்ச்சல் இருந்ததது கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு 100 நபர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். 24 நபர்கள் மட்டும் இன்னும் மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கிடையாது. கொரோனா வைரஸ் தடுப்பில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே முழுமையாக தடுக்க முடியும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் தினந்தோறும் தூய்மைப்பணி மேற்கொண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பணி செய்யும் இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டவர் வருகையின்போது மருத்துவக்குழுவின் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். ரயில்நிலையம், பேருந்து நிலையம் மற்றும் ஆலய வழிபாடு மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து கண்காணித்து வரவேண்டும். கிராமப்பகுதிகளில் வெளிநாடு, வெளியூரிலிருந்து யார் வந்தாலும் கிராம உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கண்காணிக்க வேண்டும்.

யாரேனும் வந்து காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் இருந்தது கண்டறிந்தால் உடனடியாக சுகாதாரத்துறை மற்றும் கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதிக அளவில் பொதுமக்கள் ஒன்றாகக் கூட வேண்டாம். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஏடிஎஸ்பிக்கள் கிருஷ்ணராஜ், மங்களேஸ்வரன், இணை இயக்குநர் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர்கள் யசோதாமணி, யோகவதி, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், சிவகங்கை ஆர்டிஓ சிந்து, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஜயநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,arrival ,foreigners ,villages ,
× RELATED பர்லியார் சோதனைச்சாவடியில் கலெக்டர் ஆய்வு