×

மாணவர்களின் கால்களை பதம்பார்க்கும் சிக்கல் சாலை சீரமைக்க வலியுறுத்தல்

சாயல்குடி, மார்ச் 19: சிக்கல் பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதாலும், குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கடலாடி ஒன்றியம் சிக்கல் அரசு மேல்நிலை பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அருகிலுள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிகள் அமைந்துள்ள தொட்டியாபட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சிக்கல் ஊரணியில் பெருகி கிடக்கும் தண்ணீரை சிக்கல், தொட்டியாபட்டி கிராம மக்கள் துணிகள் துவைக்க, குளிப்பதற்கு, கால்நடைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தொடக்கப்பள்ளி முன்புறம் முதல் அரசு மேல்நிலைப்பள்ளி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்டல் சாலை செல்கிறது. இச்சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் மாணவர்கள் நடந்து சென்றால் கூர்மையான கற்கள் கால்களை பதம் பார்க்கிறது. மேலும் இச்சாலையின் கீழ் பகுதியில் தண்ணீர் குழாய் செல்கிறது. சாலை சேதமடைந்தவுடன், தண்ணீர் குழாய்களும் ஆங்காங்கே சேதமடைந்து கிடக்கிறது. இதனால் தண்ணீர் வெளியேறி பள்ளி பகுதியில் தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தண்ணீர் தேங்கி கிடக்கும் சாலையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்த தண்ணீர் குழாயை சீரமைக்க வேண்டும். மெட்டல் சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்