×

செம்மண் சாலையாக மாறிய சாத்தியார் ஓடை

அலங்காநல்லூர், மார்ச் 19: பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையில் இருந்து வரும் நீர்வரத்து ஓடையில் சில ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லை. இதன் காரணமாக இந்த ஓடை இப்பகுதி சாலையாக பயன்படுத்தப்படுகிறது. மதுரை பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி உயரம் கொண்டது. கடந்த 5 ஆண்டுகளாக அணைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. இதனால் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த அணை நிரம்பி வெளியேறும் தண்ணீர் செல்லும் சாத்தியார் ஓடை அணைப்பகுதியில் ஆரம்பித்து அலங்காநல்லூர், வலசை, ஆனையூர் வழியாக செல்லூர் கண்மாய்க்கு செல்லும் இந்த சாத்தியார் ஓடை தற்போது பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஓடை சாக்கடை கால்வாயாக மாறிவிட்டது.

அலங்காநல்லூர் கேட்டுகடை பகுதியில் புதர் மண்டி கிடக்கும் பகுதிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பாலமேடு மஞ்ச மலைப்பகுதியில் ஒரு நாள் கனமழை பெய்தால் சாத்தியார் ஒடையிலும் மஞ்சமலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர், மதுரை மக்களை மிரட்டும். தற்போது வெள்ளம் கரை புரண்டு ஒடிய ஆறுகளும், ஓடைகளும் வண்டிப்பாதையாக மாறி வரும் அவல நிலை உள்ளது. எனவே, சாத்தியார் ஓடையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : stream ,sheep road ,
× RELATED குமாரபாளையம் கோம்புபள்ளம் ஓடையில்...