×

ஓமலூரில் பரபரப்பு அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

ஓமலூர், மார்ச் 19: ஓமலூர் அரசு மருத்துவமனையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், நோயாளிகள் மூச்சுத்திணறி அவதிப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இம் மருத்துவமனைக்கு ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும், அடிதடி, விபத்து, காய்ச்சல் நோய் தொற்றுக்கள், கர்ப்பிணி பெண்கள் என பலர் சிகிச்ைச பெற்றும், சிலர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் 10 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். நள்ளிரவில் இப்பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மையத்தில் உள்ள மின்சார போர்டில் இருந்து வெடித்து தீ பிடித்த நிலையில் அனைத்து பகுதிக்கும் தீ பரவியது. மேலும், உள்ளே புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால், அந்த கட்டிடத்தில் இருந்த நோயாளிகள் மூச்சுத்திணறி வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து வெளியே இருந்த நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளே சென்று நோயாளிகளை தூக்கி வந்து அருகில் இருந்த கட்டிடத்தில் படுக்க வைத்தனர்.

தீ விபத்து குறித்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் இளைஞர்கள் மெயின் இணைப்பை துண்டித்து தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர். தகவலின் பேரில் ஓமலூர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அதிக மின்னழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறினர். இந்த தீ விபத்தில், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் மின் தடையால் நோயாளிகள் விடிய விடிய தூங்க முடியாமல் தவித்தனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Tags : fire ,Parambara Government Hospital ,Omalur ,
× RELATED 17 வயது சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபர்