×

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையால் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, மார்ச் 18: திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், டிஆர்ஓ ரத்தினசாமி, ஆர்டிஓ தேவி, மைதிலி, துணை கலெக்டர் (பயிற்சி) மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் துறை வாரியாக ஆலோசனை நடத்தினார். மேலும், மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சுகாதாரம், நகராட்சி, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, போக்குவரத்து, அரசு போக்குவரத்துக் கழகம், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

அதேபோல், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இதனை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் எனும் பெயரில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதை தடுக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் தேர்வு நடைபெறும் நாளில் பள்ளிக்கு வர வேண்டும். ேமலும், சினிமா தியேட்டர்கள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள், பார்கள், விளையாட்டு அரங்கம், போன்றவை மூடப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

திருமண மண்டபங்களில் முன்பே திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர வேறு புதிய நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. திட்டமிட்ட நிகழ்ச்சிகளிலும் அதிகமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் மற்றும் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், மனுநீதி நாள் முகாம் ேபான்றவை, வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.

Tags : Coroner ,Thiruvannamalai District ,
× RELATED கொரோனாவுக்கு சிறைத்துறை அதிகாரி பலி