×

பெரணமல்லூர், ஆரணி மற்றும் போளூரில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

பெரணமல்லூர், மார்ச் 18: பெரணமல்லூர் அருகே பச்சையம்மன் கோயிலில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியில் பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில் உள்ளது. இந்நிலையில், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேல்சீசமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று கோயில் வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடந்தது. முகாமிற்கு கோயில் செயல் அலுவலர் சத்தியா தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். இதில் ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அலுவலர் ஹேமப்பிரியா கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும், அதில் பொதுமக்கள் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது குறித்து விளக்கினார். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பக்தர்கள் செல்லும் வழியில் உள்ள கைப்பிடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் ஆனந்தன், கோயில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் அலுவலக ஊழியர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.

ஆரணி: ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பது குறித்தும், கிருமி நாசினியை பயன்படுத்தும் முறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் சிவானந்தன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பது குறித்து ஓட்டுனர்களுக்கு செயல்விளக்கம் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். பின்னர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகன பதிவிற்காக கொண்டுவரப்பட்ட ஆட்டோ, வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அடிக்கடி கைபடும் இடங்களில் கிருமிநாசினியை எவ்வாறு கைத்தெளிப்பான் மூலம் தெளிப்பது குறித்து செயல்விளக்கமளித்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

போளூர்: போளூர் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் அதிகம் நடமாடும் பஸ் நிலையம், வங்கிகள், காய்கறி மார்க்கெட்டுகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பேரூராட்சி ஊழியர்கள் கொண்டு கிருமி நாசனி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், போளூரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ெசல்லும் பஸ்களுக்கும், போளூருக்கு வரும் பஸ்களுக்கும் கிருமி நாசனி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போளூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பேரூராட்சி துப்புரவு பயனாளிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் யூ.முகம்மது ரிஜ்வான் தலைமையில் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags : Corona Awareness Camp ,Peranamallur ,Arani ,Polur ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...