×

தம்பியை கொன்றவரை பழிவாங்க கத்தியுடன் வந்து பெண்ணை தாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் கைது வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி, மார்ச் 18: வந்தவாசி அருகே தம்பியை கொன்றவரை பழிவாங்க கத்தியுடன் வந்து பெண்ணை தாக்கிய அண்ணன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார்(34). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் செல்வம், பிரகாஷ், பிரபாகரன். இவர்கள் 3 பேரும் வீட்டுமனை தகராறு சம்பந்தமாக கடந்த 4 மாதத்திற்கு முன்பு அருண்குமாரை கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் 3 பேரும் கைதாகி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தனர். இதையறிந்த கொலையான அருண்குமாரின் அண்ணன் ஆனந்த்பாபு(38) என்பவர், தம்பியை கொன்றவர்களை பழிவாங்க முடிவு செய்திருந்தாராம்.

இந்நிலையில், ஜாமீனில் வந்த செல்வம் மனைவி மாலதியின் தாய் வீடு, வந்தவாசி அடுத்த அதியனூர் கிராமத்தில் உள்ளது. மாலதியின் உறவினர் நேற்று முன்தினம் அதியனூர் கிராமத்தில் இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில், செல்வம் கலந்து கொள்வார் என்பதால், அவரை கொலை செய்ய ஆனந்த்பாபு முடிவு செய்தார். இதற்காக அவர் தனது உறவினர்கள் டெல்லிபாபு(28), அகஸ்டின்(25) ஆகியோருடன் ஒரே பைக்கில் நேற்று முன்தினம் கத்தியுடன் அதியனூர் கிராமத்திற்கு வந்துள்ளார். துக்க நிகழ்ச்சியில் இருந்த செல்வத்தின் மாமனார் ஏழுமலை, மாமியார் ஜீவா ஆகியோரிடம் செல்வத்தை கேட்டு தகராறு செய்தார்.

அதற்கு அவர்கள், செல்வம் தனது வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினர். ஆனால், அதனை நம்பாத ஆனந்த்பாபு கோஷ்டியினர், ஆத்திரமடைந்து ஜீவாவை கட்டையால் சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டியதாக தெரிகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த கீழ்கொடுங்கலூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்த்பாபு, டெல்லிபாபு, அகஸ்டின் ஆகிய 3 பேரையும் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
பின்னர், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பெண்ணிடம் வழிப்பறி