×

கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்கள் கூடும் இடங்களில் ‘அலர்ட்’ பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு

திண்டுக்கல், மார்ச் 18:கொரோனா பீதி எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் துவங்கிய கொரோனா வைரஸின் கோர தாண்டவம், உலகமெங்கும் வேகமாக பரவுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒருபுறம் ஆயிரக்கணக்கானோர் பலியாகிக் கொண்டே இருக்க, மறுபுறம் பாதிப்போடு லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்டை மாநிலமான, கேரளாவில் கொரோனா பலருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார்கள், கிளப்கள், ஷாப்பிங் மால்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பலர் வெளியூர் பயணங்களையும் ஒத்தி வைத்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக (மதுரை) லிமிடெட் நிர்வாக இயக்குநர் முருகேசன் அறிவுறுத்தலின்படி அரசு பஸ்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி மருந்து தெளிக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி, திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் கணேசன் தலைமையில் இதற்கான பணி நேற்று துவங்கியது.

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நேற்று அனைத்து அரசு பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. டயர்கள், படிக்கட்டு, கைப்பிடி, பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துநர் இருக்கைகள், பேருந்தின் உள்பகுதி உட்பட அனைத்து இடங்களிலும் மருந்து தெளிக்கப்பட்டது. திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளில் இருந்து வெளியேறும் மற்றும் உள்ளே வரும் அனைத்து அரசு பஸ்களிலும் கிருமிநாசினி மருந்து அடிக்கப்பட்டது.
மேலும் இம்மண்டல தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கிளைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் கைகளை சோப் மூலம் கழுவ அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள டாக்டர்கள், ஊழியர்கள் மாஸ்க் அணிந்து பணியாற்றுகின்றனர். உத்தரவை மீறினால்....: திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் பார்களை நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை மூடுமாறு கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். விதிகளுக்கு மாறாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...