×

வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேர் தொடர் கண்காணிப்பு குமரியில் கொரோனா வார்டில் மேலும் ஒரு பெண் டாக்டர் அனுமதி

நாகர்கோவில், மார்ச் 18: கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் பெண் டாக்டர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 3 பேர் தனி வார்டில் உள்ளனர்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாகர்கோவில், களியக்காவிளை, குழித்துறை, படந்தாலுமூடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டன. இதே போல் பல முக்கிய மால்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்கும் வகையில் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசின் உத்தரவை தொடர்ந்து அனைத்து கல்வி நிறுவனங்களும் நேற்று செயல்பட வில்லை.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் நேற்று முன் தினம் 2 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒருவர் கத்தார் நாட்டில் இருந்து வந்தவர் ஆவார். மற்றொருவர் கேரளா சென்று வந்தவர் ஆவார். இவர்களுக்கான ரத்தம் மற்றும் சளி மாதிரிகள், திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன் தினம் பெண் டாக்டர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் அவர், சமீபத்தில் கேரளாவுக்கும் சென்று வந்திருக்கிறார். அவருக்கு காய்ச்சலுடன், சளியும் இருந்ததால், சந்தேகத்தின் பேரில் சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

பரிசோதனை முடிவுகளை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுழைவு வாயில்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் தவிர மற்ற வாகனங்களில் வருபவர்கள், நடந்து வருபவர்கள் உள்பட அனைவரும் கைகளை நன்றாக கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.  கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என்பது பற்றியும், பயிற்சி டாக்டர் விளக்கி வருகிறார்கள். குழித்துறை, நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் மருத்துவ குழுக்கள் கண்காணித்து வருகிறார்கள்.  பஸ்கள், ரயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள பணிமனை, ராணித்தோட்டத்தில் உள்ள பணிமனைகளில் உள்ள பேருந்துகளில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

வடசேரி, அண்ணா பஸ் நிலையத்திலும் மருந்து தெளிக்கப்பட்டது. தினமும் பஸ்களை நன்றாக சுத்தம் செய்து, கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். இதே போல் ரயில் பெட்டிகளிலும் இருக்கைகள், ஜன்னல் மற்றும் கழிவறை கதவுகள், கைப்பிடிகளை சுத்தம் செய்ய வேண்டும் அதிகாரிகள் கூறி உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் அவர்களின் வீடுகளிேலயே இருக்கும்படி  அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகர  பகுதியில் 18 பேர், 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதில் 14 பேர் 28 நாட்களை கடந்து விட்டனர். 4 பேர்  மட்டும் கண்காணிப்பில் உள்ளனர். இதே போல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்,  மாவட்டத்தின் பிற பகுதிகளில் 6 பேரை கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இவர்கள்  ஏற்கனவே 10 நாட்களை கடந்து விட்டனர். இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்று  அதிகாரிகள் கூறினர். மொத்தம் 10 பேர், வீடுகளில் வைத்தே கண்காணிக்கப்பட்டு  வருகிறார்கள். கொல்லங்கோடு, சூழால்், களியக்காவிளையில் சுகாதாரத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைத்து, அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. வாகனங்களில் வருபவர்களின் உடல் சூடு அளவை கண்டறியும் வகையில் பரிசோதனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என  சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : overseas ,surveillance kumari ,Corona Ward ,
× RELATED போதையில் அதிவேகமாக கார் ஓட்டியதை...