×

மார்ச் 31 வரை கன்னியாகுமரியில் படகுசேவை ரத்து

கன்னியாகுமரி, மார்ச் 18: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரியில் மார்ச் 31 வரை சுற்றுலா பயணிகளுக்கான படகுசேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச  சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பீதியால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின்  வருகை கணிசமாக குறைந்து விட்டது. ஆனால் வட மாநில சுற்றுலா பயணிகள் சிலர்  வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் இல்லாததால் பரபரப்புடன் காணப்படும்  கன்னியாகுமரி தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. கடற்கரை வெறிச்சோடியது.

கலெக்டரின் அறிவுரைப்படி கன்னியாகுமரியில்  பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர் முழுவதும் துப்புரவு  செய்து கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதுபோல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக டிக்கெட் கவுன்டர் பகுதி, படகுத்தளம்  உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுற்றுலா  பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு முன் கைகளில் மருந்து தெளிக்கப்பட்டது.  மேலும் படகுகளில் ஏறும் சுற்றுலா பயணிகள் அணியும் லைப்-ஜாக்கெட்டுகளில்  ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு வழக்கம் போல் நேற்று காலை படகு சேவை தொடங்கியது. குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் இருந்தனர். பகல் 12 மணி வரை படகுசேவை நடந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த உத்தரவையடுத்து, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று பகல் 1 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை படகு சேவை ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக கரைக்கு அழைத்துவரப்பட்டனர். பின்னர் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் 3 படகுகளும் பூம்புகார் படகுதுறையில் நிறுத்திவைக்கப்பட்டன.

Tags : Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...