×

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் மார்பக புற்றுநோய் பரிசோதனை கருவி பழுது

நாகர்கோவில், மார்ச் 18: அகில இந்திய மக்கள் நல இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஜோணி குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல மாதங்களாக பெண்களுக்கு மார்பக கட்டிகள், புற்றுநோய் கட்டிகளா என்று கண்டறியக்கூடிய மேமோகிராம் கருவி பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு வரும் பெண் நோயாளிகளுக்கு மார்பக பரிசோதனை செய்து புற்றுநோய் கட்டிகளா என்று தெரிந்துகொள்ள முடியாத மிகவும் கஷ்டமான நிலை காணப்படுகிறது.

இந்தநிலையில் மருத்துவர்கள் நோயாளிகளை மேமோகிராம் எடுத்திட தேதி, நாள் குறிப்பிட்டு மருத்துவமனைக்கு வரச்சொல்லி பின்னர் வீட்டிற்கு அனுப்புகின்றனர். பிறகு நோயாளிகள் அதே நாளில் மீண்டும் வரும்போது மேமோகிராம் எடுக்கும் கருவி இன்றும் சரி செய்யவில்லை  என்று கூறி வெளியிடங்களில் சென்று மேமோகிராம் எடுத்து வர மருத்துவர்கள் நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இதனால் ஏழை நோயாளிகள் நோய் கண்டறிய முடியாமல் மேலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே உடனடியாக மேமோகிராம் எடுக்கும் கருவி பழுது நீக்கி நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Asaripallam Government Medical College ,
× RELATED ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் டாக்டர் காரில் புகுந்த விஷப் பாம்பு