விழுப்புரம் மாவட்டத்தில் அதிரடி சோதனை 15 லட்சம் மதுபாட்டில், கார்கள் பறிமுதல்

விழுப்புரம், மார்ச் 18: விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்பவர்கள் மீதும், புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்துபவர்கள் மீதும் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விழுப்புரம் கூடுதல் எஸ்பி சரவணக்குமார், மதுவிலக்கு டிஎஸ்பி இளங்கோவன் ஆகியோரின் மேற்பார்வையில் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பனையபுரம், கெங்கராம்பாளையம், வ.பகண்டை கூட்டுசாலை ஆகிய இடங்களில் உள்ள மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பனையபுரம் சோதனைச்சாவடி வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் 250 மதுபாட்டில்களும், 70 லிட்டர் சாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த வாகனத்தையும், மதுபாட்டில்கள், சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி வழியாக வந்த 2 கார்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில், ஒரு காரில் 500 மதுபாட்டில்களும், மற்றொரு காரில் 520 மதுபாட்டில்களும் மற்றும் பகண்டை கூட்டுசாலையில் வந்த ஒரு காரில் 730 மதுபாட்டில்களும், 110 லிட்டர் சாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 3 கார்களையும், மதுபாட்டில்கள், சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரம் மதுபாட்டில்கள், 180 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சரக்கு வாகனம், 3 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.15 லட்சமாகும். இதனை கடத்தியதாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா வளத்தப்பள்ளத்தை சேர்ந்த சிவராஜ் ( 36), விழுப்புரம் அருகே கரடிப்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், மதுபாட்டில்களை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு, பறிமுதல் செய்த போலீசாரை பாராட்டினார்.

Related Stories: