×

செய்முறை மதிப்பெண் வழங்காததால் ஆத்திரம் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதம்- பரபரப்பு

காட்டுமன்னார்கோவில், மார்ச் 18:  காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் இயங்கிவரும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள்  நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் இயற்பியல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி இயற்பியல் ஆசிரியர் தேர்வெழுதும் மாணவர்கள் 71 பேரில் 45 பேருக்கு செய்முறை மதிப்பெண்கள் வழங்கவில்லை என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று காலை பள்ளிக்கு வந்து அலுவலகத்தில் இருந்த ஆசிரியர்களிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் உதவி ஆய்வாளர் இளவரசி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து விசாரணை செய்து பெற்றோர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டபோது, இயற்பியல் ஆசிரியர் வகுப்பிற்கு சரியாக வரமாட்டார். மாறாக ஆய்வகத்தில் இருந்துகொண்டு செல்போனை உபயோகிப்பதையே வழக்கமாக கொண்டிருப்பார். இதனால் மாணவர்கள் வகுப்பைவிட்டு விளையாட சென்று விடுகின்றனர். ஆசிரியர் பாடம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தலைமையாசிரியரிடம் புகார் மனு அளித்தோம். அன்றிலிருந்து எங்களை மிரட்டுவது திட்டுவது என வெறுப்பைகாட்டி வந்தார். புகார் கூறிய அந்த 45 மாணவர்களுக்கு மட்டும் செய்முறை மதிப்பெண் போடவில்லை என அறிந்தோம். இதில் குறைந்தபட்சம் 7 மதிப்பெண்களாவது பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் தேர்ச்சி பெற முடியாது.

இந்த பயத்தில் பெற்றோர்களிடம் தெரிவித்தோம். அதன்படி ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர் ஏற்கனவே மதிப்பெண்களை போட்டுவிட்டதாக பொய் கூறுகின்றார். குறிப்பிட்ட 45 மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் அளித்திருப்பதை கல்வித்துறை அதிகாரிகள் உறுதிசெய்து தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  எனவே சம்பந்தப்பட்ட பள்ளிகல்வித்துறை இதுபோன்ற ஆசிரியர்களை துறைரீதியாக தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Parents ,teachers ,
× RELATED பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை