×

கொரோனா தடுக்க அரசு உத்தரவு எதிரொலி குமரியில் 1300 நர்சரி, தொடக்க பள்ளிகள் மூடல்

நாகர்கோவில், மார்ச் 17: கொரோனா பீதி காரணமாக, குமரி மாவட்டத்தில் சுமார் 1300 நர்சரி, தொடக்க பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 115 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கேரளாவையொட்டி உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் தியேட்டர்கள், மால்கள் மற்றும் 5ம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகள் வரும் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன் படி குமரி மாவட்டத்தில் தியேட்டர்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. குறிப்பாக குமரி - கேரள எல்லை பகுதியையொட்டி உள்ள படந்தாலுமூடு, களியக்காவிளை, குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 திரையரங்குகள் மூடப்பட்டன. நாகர்கோவிலிலும் சில திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. குமரி மேற்கு மாவட்டத்தில் பல முக்கிய மால்களும் செயல்பட வில்லை. கேரளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளதால், குமரி எல்லையோர பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. சளி, காய்ச்சல் பாதிப்புடன் யாராவது இருந்தால் அவர்கள், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு  கைகளை கழுவ வாசனை திரவம் வழங்கப்பட்டு வருகிறது. வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் முக கவசம் அணிந்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் நர்சரி, தொடக்கப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் சுமார் 1300 பள்ளிகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. அரசு பள்ளிகள், மூடப்பட்டாலும் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும். வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என தமிழக அரசு உத்தரவில் கூறி இருந்தது. அதன்படி நேற்று தொடக்கப்பள்ளிகள் இயங்கவில்லை என்றாலும் கூட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பணிக்கு வந்து இருந்தனர். மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட பிற அலுவலக பணிகளை கண்காணித்தனர். கொரோனா பீதி காரணமாக மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்துள்ளனர். மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் , மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமையில் கை கழுவும் முறை தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அலுவலகத்துக்கு வந்தவர்களுக்கும் அதற்கான திரவம் விடப்பட்டு, கைகள் சுத்தம் செய்வது கொடுத்து வலியுறுத்தப்பட்டது. மற்ற தனியார் அலுவலகங்கள், காய்கறி மார்க்கெட்டுகள், கடை வீதிகளிலும் ஏராளமானவர்கள் முக கவசம் அணிந்து இருந்ததை காண முடிந்தது.

Tags : corona closure ,nursery ,elementary schools ,Kumari ,
× RELATED பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மாநில...