×

இருங்காட்டுகோட்டை சிப்காட்டில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்

பெரும்புதூர், பிப்.28: இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில்  குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் ஊழியர்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் ரோந்து போலீசாரை நியமக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
பெரும்புதூர் அருகே இருங்காட்டுகோட்டை, காட்டரம்பாக்கம், கீவளுர், தண்டலம், பென்னலூர் ஆகிய கிராமங்களை ஒன்றிணைத்து இருங்காட்டுகோட்டை சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் கார் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் கனரக, இலகுரக வாகனங்கள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் 400க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்த சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்படும் பல்வேறு தொழிற்சாலைகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருங்காட்டுகோட்டை சுற்றி உள்ள கிராமங்களில் தங்கி வேலை செய்கின்றனர்.தற்போது சிப்காட் பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் நடந்து மற்றும் பைக்கில் செல்லும் ஊழியர்களிடம் செல்போன், பணம், செயின் உள்பட வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தனியார் தொழிற்சாலை ஊழியர் கள் கூறுகையில், இருங்காட்டுகோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் பணி முடிந்து இரவில் நடந்தும், பைக்கிலும் தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். அப்போது, ஊழியர்களை மறித்து, சில மர்மநபர்களால், வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.கடந்த 2 நாட்களுக்கு முன் இருங்காட்டுகோட்டை - காட்டரம்பாக்கம் சாலையில் உள்ள மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த சந்திரா என்பவரது கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை, மர்மநபர் பறித்து சென்றார். கடந்த மாதம் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த பைக் திருடு போனது. மேலும்  ஊழியர்களை கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதனை தடுக்க, இருங்காட்டுகோட்டை சிப்காட் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.

சிசிடிவி கேமரா இல்லை
இருங்காட்டுகோட்டை சிப்காட் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தும் மர்மநபர்கள், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கவும், ஊழியர்களை காப்பற்றவும் சிப்காட் சாலையில் மின் விளக்கு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை, சம்பந்தப்பட்ட போலீசாரும், சிப்காட் நிர்வாகமும், தொழிற்சாலைகளின் நிர்வாங்களும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு