×

தனியார் பள்ளி அருகே பெட்ரோல் பங்க் அமைக்க இடைக்கால தடை

சென்னை, பிப். 28: பெரும்புதூர் பகுதியில் செயின்ட் மெரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 1989ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்கு 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இப்பள்ளியின் அருகில் இந்துஸ்தான் பெட்ரொலியம் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நடக்கிறது.இதற்கு தடை விதிக்க கோரி, பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், பள்ளிகள், மருத்துவமனைகள் அருகில் பெட்ரோல் பங்குகள் அமைக்க கூடாது என விதிகள் உள்ளன. இதை மீறி பெட்ரோல் பங்க் அமைக்க கட்டுமான பணிகள் நடக்கின்றன. பெட்ரோல் பங்க் இருக்கும் இடங்களில் காற்று மாசு மற்றும் ஒலி மாசுக்கள் ஏற்படும். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகள், உடல் நலக் குறைவு ஏற்படும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, பள்ளியின் அருகில் பெட்ரோல் பங்க் அமைக்க தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளி நிர்வாகம் சார்பில் மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பள்ளி அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க இடைக்கால தடை விதித்து, விசாரணையை மார்ச் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : private school ,
× RELATED பிரதமர் மோடி வரும் நிலையில் தனியார்...