×

வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டையில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்

வாலாஜாபாத், பிப்.28: வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டையில் பைப்லைன் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி, கூட்டுறவு வங்கி, கிராம நிர்வாக அலுவலகம், நூலகம், இ-சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன.இங்கிருந்து, நிலத்தடிநீர் மற்றும் பாலாற்று நீரை தனித்தனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி, தினமும் கிராம மக்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு பைப்லைன் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், முத்தியால்பேட்டையில் இருந்து களியனூர் செல்லும் சாலையை ஒட்டி பாலாற்று குடிநீர் செல்லும் பைப்லைன், கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்தது. இதனால், பைப் உடைப்பு பகுதியில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி, வீணாகிறது.

இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுபோல் பைப்லைனில் இருந்து வெளியேறும் குடிநீர், அருகில் தேங்கியுள்ள கழிவுநீரில் கலக்கிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு பின், குடிநீர் வினியோகம் நிறுத்திவிட்டால், வெளியேறிய குடிநீர், கழிவுநீருடன் மீண்டும் பைப்லைனில் சென்றுவிடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மேலும், 2 இணைப்பு கிராமங்களும் இந்த ஊராட்சியில் அடங்கியுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் தினமும் நிலத்தடிநீர் மற்றும் பாலாற்று குடிநீர் பைப்லைன் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.இதில், விநியோகிக்கப்படும் குடிநீர் பைப்லைனில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, தினமும் ஆயிக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதுபற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன், முத்தியால்பேட்டையில் இருந்து களியனூர் செல்லும் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பாலாற்று குடிநீர் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டது. அதனை அதிகாரிகள் கண்டு ெகாள்ளாமல் விட்டதால், குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் பைப்லைன் நிறுத்தப்பட்ட பின், மீண்டும் கழிவுநீரும் குடிநீரும் அதே பைப்பில் கலந்து உள்ளே செல்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதையொட்டி, இந்த குடிநீரை பயன்படுத்த இப்பகுதி மக்கள் தயங்குகின்றனர். இவை மட்டுமின்றி, பைப்லைனில் தினமும் விடப்படும் முதல் ஒருமணி நேரத்துக்கு குடிநீரில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.எனவே, ஊராட்சியில் உள்ள அனைத்து பைப்லைன்களையும் சீரமைத்து, கோடை காலத்துக்கு முன், குடிநீரை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றனர்.

Tags : Walajabad Union Muthialpet ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...