×

தொழிலாளர்களின் சம்பள பிரச்னையில்? ஓட்டல் சரவண பவன் மேலாளர் தற்கொலை

காஞ்சிபுரம், பிப்.28: காஞ்சிபுரம் சரவணபவன் ஓட்டல் மேலாளர், ஊழியர்களின் சம்பள பிரச்னையால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், ஓட்டல் சரவணபவனின் 3 கிளைகளை சேர்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஊத்துக்குளி அருகே விராலிமலையை சேர்ந்தவர் பழனியப்பன் (49). இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு செந்தமிழ்செல்வன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பழனியப்பன், குடும்பத்துடன் ஓட்டல் சரவணபவன் நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரத்தில் வழங்கிய வீட்டில் வசித்து வந்தார்.ஓட்டல் சரவணபவனுக்கு சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் காந்தி சாலை, நெல்லுக்காரத் தெரு  மற்றும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதகிளில் கிளைகள் செயல்படுகின்றன. இந்த 3 கிளைகளில் சேர்த்து 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். 3 கிளைகளுக்கும் பழனியப்பன் மேலாளராக இருந்தார்.கடந்த 3 மாதமாக ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சிரமப்பட்ட ஊழியர்கள், மேலாளர் பழனியப்பனிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து பழனியப்பன், ஓட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால், நிர்வாகத்தின் அனுமதியின்றி, ஓட்டல் ஊழியர்களுக்கு முன்பணமாக தலா ₹5000 வீதம் 50 பேருக்கு பழனியப்பன் வழங்கியுள்ளார். இதனால் நிர்வாகத்துக்கும், பழனியப்பனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து வீடு திரும்பிய பழனியப்பன் தனது அறையில் தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாக அவர், அறையில் இருந்து வரவில்லை. இதனால், குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்குப்போட்டு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து விஷ்ணுகாஞ்சி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள மகன், திருமணம் ஆகாத மகள் என குடும்பப் பிரச்னை காரணமாக பழனியப்பன் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.இதற்கிடையில், காந்தி சாலை கிளை ஓட்டல் சரவணபவன் முன்பு 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று காலை திரண்டு, ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, பழனியப்பன், ஓட்டல் சரவணபவன் நிர்வாகத்தின் மீது புகார் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறி கோஷமிட்டனர்.சுமார் ஒன்றரை மணி நேர ஆர்ப்பாட்டத்துக்கு பின்,  ஓட்டல் சரவணபவன் மனிதவள மேம்பாட்டு அலுவலர், அங்கு சென்று அவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : manager ,suicide ,Surat Pawan ,
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்