×

வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாடுவதில் பிரச்னை இந்து அறநிலையத்துறை போலீசில் புகார் செய்யலாம்

சென்னை, பிப். 28:  காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையில் மோதல் இருந்து வந்தது. இதையொட்டி, திவ்ய பிரபந்தம் பாடும் முன் ராமனுஜ தயாபத்ரம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வடகலை பிரிவினருக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தடை விதிக்க மறுத்த ஐகோர்ட், வடகலையினர் மந்திரம் உச்சரிக்கவும், திவ்யப்பிரபந்தம் பாடவும் அனுமதியளித்து கடந்த 1915 மற்றும் 1969ம் ஆண்டுகளில் தீர்ப்பளித்தது. அதேசமயம் தென்கலை பிரிவினர் முதலில் பாட அனுமதித்தது.இந்த தீர்ப்புகளுக்கு முரணாக ஒரு பிரிவினரை முதலில் பாட அழைத்த கோயில் நிர்வாக அறங்காவலர் தியாகராஜன்  மது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக்கோரி  ரங்கநாதன் என்பவர் ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, கோயில் நிர்வாக அறங்காவலர் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், கோயிலில் யார் முதலில் திவ்ய பிரபந்தம் பாடுவது என்பதில் இரு பிரிவினர் தொடர்ந்து மோதலில் ஈடுபடுவதால் பூஜைகள் பாதிக்கப்படுகின்றன. அவர்கள் இடையிலான பிரச்னைக்கு தீர்வுகாண மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன என தெரிவித்தார். பின்னர், நீதிபதி அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கோயில்களில் மந்திரங்கள் உச்சரிப்பது என்பது அடிப்படை உரிமை. அதை நீதிமன்றம் தடுக்கவோ, தலையிடவோ முடியாது. கடந்த 2 ஆண்டுகளாக கோயிலில் பிரபந்தம் பாடவில்லை. கடந்த 1915 மற்றும் 1969ம் ஆண்டுகளில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.பூஜை காலங்களில் முதலில் தென்கலை பிரிவினரை அழைக்க வேண்டும். அவர்கள், சைலா தயாபத்திரத்தில் முதல் 2 வரிகளை பாடவேண்டும். பின்னர் வடகலை பிரிவினர், ராமானுஜ தயாபத்திரத்தில் முதல் 2 வரிகளை பாடவேண்டும். இதையடுத்து, இருபிரிவினரும் ஒன்றாக பிரபந்தம் பாடவேண்டும். பிரபந்தம் பாடியபின், இறுதியாக தென்கலையினர் மணவாள மாமுனிகள் வாழித் திருநாமத்தையும், வடகலையினர் தேசிகன் வழித் திருநாமத்தையும் பாடி, பூஜையை முடிக்க வேண்டும்.

இந்த உத்தரவை இரு பிரிவினர்களில் யாராவது ஒருவர் மறுப்பு தெரிவித்தால், இருபிரிவினர்களில் யாராவது பூஜை காலங்களில் சட்டஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினால், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில், அறநிலைய துறை உதவி ஆணையர் புகார் செய்யவேண்டும். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கைகளை உரியவர்கள் மீது எடுக்க வேண்டும். இந்த உத்தரவு மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Prabandha ,Varadaraja Perumal temple ,Hindu Charities Department ,
× RELATED ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள்...