×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வார்டு மறுவரையறையில் குளறுபடிகள்

செங்கல்பட்டு, பிப்.28: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை வரைவு கருத்துக்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது. தமிழ்நாடு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமை வகித்தார். கலெக்டர் ஜான்லூயிஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வார்டு மறுவரையறை குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே கருத்துக்கள் கேட்கப்பட்டன. அப்போது, முன்னாள் பாமக எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம்: மறைமலைநகர் நகராட்சி வார்டு மறுவரையறையில்  அதிக குளறுபடி உள்ளது. சரிவர கள ஆய்வு நடத்தவில்லை. திருக்கழுக்குன்றம் ஒன்றிய மாவட்ட குழு உறுப்பினர்கள் 3ல்  இருந்து 2ஆக   குறைக்கப்பட்டுள்ளது. காட்டாங்கொளத்தூர்  ஒன்றியத்தில் அதிக  வாக்காளர்கள் உள்ளதால் மாவட்ட குழு உறுப்பினர்கள் 3க்கு  பதிலாக 3 என உயர்த்தவேண்டும் என்றார்.

ஜாகிர் உசேன் (திமுக): திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் வார்டு மறுவரையறையில்  பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வரையறை செய்யப்பட்டுள்ளது. போலியான வாக்காளர்களை வைத்து வரையறை செய்துள்ளனர்.சீனிவாசன் (அதிமுக): நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக வாக்காளர்கள் ஆண்கள் உள்ளதால், இதனை ஆண்களுக்கு ஒதுக்க வேண்டும்.பக்கீர் முகமது (திமுக): புதுப்பட்டினம் ஊராட்சி ஆதிதிராவிடர் பிரிவுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினர் அதிகமாக உள்ளதால் ஊராட்சி தலைவர் பதவியை பொதுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும். செந்தில்குமார் (அதிமுக): செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தலா வார்டுக்கு 4 பக்க எல்லைகளை  சரிவர நிர்ணயிக்கவில்லை.சகாதேவன் (புரட்சி பாரதம்): லத்தூர் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவி பொதுப் பட்டியலில் உள்ளது. அதிக தாழ்த்தப்பட்டவர்கள் வசிப்பதால் தலைவர், கவுன்சிலர் பதவிகளை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கவேண்டும்.

கிருஷ்ணன் (அதிமுக): புனித தோமையர் மலை ஒன்றியத்தில் தமிழகத்திலேயே  அதிகமாக வாக்காளர்கள் உள்ளனர் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட குழு உறுப்பினர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட குழு உறுப்பினர்களும் உள்ளனர். அதிக வாக்காளர்களை கொண்ட செங்கல்பட்டு மாவட்டத்தில், கூடுதலாக மாவட்ட குழு உறுப்பினர்கள் கொடுக்க வேண்டும். குமரவேல் (அதிமுக): திருப்போரூர் ஒன்றிய வார்டுகளின் மறுவறையில்  திருத்தம் செய்யும்போது அதிகாரிகள் எங்களின்  கருத்துக்களையும் கேட்டு அதன்படி செய்ய வேண்டும். தண்டபாணி (திமுக): காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தின் கருநீலம், காயரம்பேடு ஆகிய பகுதிகளில் அதிகமாக வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதிகளில் ஒன்றிய குழு உறுப்பினர்களில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. அதற்கேற்றவாறு வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். பிரகாஷ் (பாஜ): செங்கல்பட்டு நகராட்சி 21வது வார்டு பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினர் அதிகமாக உள்ளதால் இந்த வார்டை  பழங்குடியினர் பட்டியலில் இருந்து பொதுப் பிரிவுக்கு மாற்றவேண்டும் என்றார்.

உரிய நடவடிக்கை: கலெக்டர் உறுதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு எல்லை மறுவரையறை வரைவு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமை வகித்தார். கலெக்டர் பொன்னையா வரவேற்றார். கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்களாக பெறப்பட்டது. மனுக்கள் மீது பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்களால் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பழனிசாமி, பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிசாமி உள்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Ward ,redevelopment ,districts ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி