×

பெரியபாளையம்-சின்னம்பேடு இடையே புதர்மண்டி கிடக்கும் ஏரிக்கால்வாய்

ஊத்துக்கோட்டை, பிப். 28: பெரியபாளையம்-சின்னம்பேடு இடையே ஏரிக்கால்வாய் புதர்மண்டி கிடப்பதால் நீரோட்டம் தடைபடும் நிலை உள்ளது. பெரியபாளையம்-சின்னம்பேடு கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில்  ராள்ளபாடி, ஜி.ஆர்.கண்டிகை,  குமரபேட்டை, பனையஞ்சேரி உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் நெல், பூ செடிகள், கரும்பு உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர். இவர்களின் தண்ணீர் தேவைக்காக பெரியபாளையம்  பாளேஸ்வரம் பகுதியில் தடுப்பணை கட்டி அங்கு தண்ணீர் தேக்கப்பட்டு இந்த தண்ணீர் சின்னம்பேடு பெரிய ஏரிக்கு  கால்வாய் வழியாக அனுப்பப்படுகிறது. இந்த கால்வாய் மூலம் பெரும்பாலான  விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது இந்த கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி அதன் தடமே மறைந்துவிட்டது.  மேலும், இந்த கால்வாய் ஒரங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ராள்ளபாடி, பனையஞ்சேரி பகுதிகளில்  தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் உள்ளனர். எனவே இந்த கால்வாயை  உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘பெரியபாளையம்-பாளேஸ்வரம் பகுதியில் இருந்து சின்னம்பேடு பெரிய ஏரிக்கு செல்லும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால்   விவசாயிகளான நாங்கள் பெரிதும் பயன்பெறுவோம். ஆனால், தற்போது அந்த ஏரிக்கால்வாய் புதர்மண்டி தூர்ந்து விட்டது.  இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதில் பெரும் சிரமம் உள்ளது. மேலும், தற்போது இந்த கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் அபாயம் உள்ளது.  மேலும் கடந்த சில மாதங்களுக்கு  முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஏரிக்கு செல்லும் கால்வாயை சிறிது தூரம் மட்டுமே பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்தனர். பின்னர், மீதமுள்ள கால்வாயை சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்.  எனவே இந்த ஏரிக்கால்வாயை  தூர்வாரி  சிமென்ட் கால்வாய் அமைக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Periyarpalayam - Cinnambade Lake ,
× RELATED புழல் சுற்றுவட்டார சாலைகளில்...