×

அண்ணனை பிரிந்து 2வது திருமணம் நகைகளை திருப்பிக் கேட்ட தம்பி சரமாரி குத்திக்கொலை

சென்னை, பிப். 28: சென்னை
எருக்கஞ்சேரியில் அண்ணனை பிரிந்து 2வது திருணம் செய்த அண்ணியிடம் நகைகளை திருப்பி கேட்க சென்ற தம்பி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணி உள்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.  
எண்ணூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் தயாளன் (26).  இவருக்கு, திவ்யா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தயாளனின் அண்ணன் சந்துரு எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். சந்துருவின் மனைவி தாரணி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  இந்நிலையில் தனுஷ் என்பவரை தாரணி இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த சந்துரு அடிக்கடி அதே பகுதியில் உள்ள தாரணி வீட்டுக்கு சென்று, தான் வாங்கி கொடுத்த நகைகளை கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் தாரணி நகைகளை தர மறுத்ததாக கூறப்படுகிறது.

நேற்று தயாளன்,  அண்ணன் சந்துரு வீட்டிற்கு சென்றபோது சந்துரு நடந்த விஷயத்தை கூறி அழுதுள்ளார்.   உடனே, தயாளன்   கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அன்னை இந்திரா காந்தி நகரில் உள்ள தாரணி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தாரணி மற்றும் அவரின் அப்பா சுகுமாரன், 2வது கணவர் தனுஷ் மற்றும் சிலர் இருந்துள்ளனர். அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தயாளன், ‘‘என் அண்ணனை வேண்டாம் என்று கூறிவிட்டு, வேறு ஒருவரை 2வது திருமணம் செய்துள்ளாயே, அவர் வாங்கி தந்த நகைகளை மட்டும் ஏன் திருப்பி தர மறுக்கிறாய்? என் அண்ணன் வாங்கி தந்த நகைகளை திருப்பி தாராவிட்டால் நடப்பதே வேறு’’ என்று தகராறு செய்துள்ளார்.

அப்போது தாரணியின் உறவினர்கள் திரண்டு தயாளனை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆத்திரம் தீராத தாரணியின் தந்தை சுகுமாரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தயாளனை சரமாரி குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த தயாளன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கொடுங்கையூர் போலீசார், தயாளன் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும், வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுகுமாரன், தாரணி, தனுஷ் உள்ளிட்ட சிலரை  தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED துணிப்பை வாங்குவதை நிறுத்தியதால்...