×

பிளஸ் 2 பொதுத்தேர்வு காலத்தில் தடையில்லா மின்சாரம் அவசியம்

திருவள்ளூர், பிப். 28: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2ல் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. அந்தவகையில் திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறையும் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாவட்டம் என்ற சிறப்பை பெற தீவிர முனைப்பு காட்டி, ஆசிரியர்கள் முதல் அலுவலர்கள் வரை செயல்பட்டு வருகின்றனர். கல்வி மாவட்டம் வாரியாக அறை கண்காணிப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களுக்கான உத்தரவுகளும், வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் இன்றும் ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே பஸ் வந்து செல்லும் கிராமங்களும் உள்ளன. இந்த கிராம மாணவர்கள் இதுவரை தான் படித்த பள்ளிக்கு தான் பஸ் வசதி பெற்றிருப்பார்கள். தற்போது வேறு பள்ளி தேர்வு மையத்திற்கு செல்லவேண்டி உள்ளது. அங்கு செல்ல போதிய பஸ் வசதி உள்ளதா? கிராமங்களுக்கு பஸ்கள் ‘கட்’ செய்யாமல் இயக்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு மாவட்ட நிர்வாகம் தக்க அறிவுரை வழங்க வேண்டும். கோடை காலம் துவங்கியதை அடுத்து மின்தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் துவங்கி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். தினமும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாவது மின்தடை ஏற்படாத நிலையை ஏற்படுத்த மின் துறையை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் அரசுதேர்வுகள் துவங்கும்போதுதான், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பங்குனி விழாக்கள் துவங்கும். அப்போது குறுகிய தெருக்களில் உள்ள கோயில்களில் கூட மெகா ஸ்பீக்கர்கள் அலறும். எனவே தெருக்களில் ஸ்பீக்கர்கள் அலறுவதை தடுக்க போலீசார் தக்க அறிவுரை வழங்க வேண்டும். மேலும், தேர்வு மையங்களில் தண்ணீர், கழிப்பறை வசதி, முதலுதவி சிகிச்சை போன்ற அத்தியாவசிய வசதிகள் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்ற தேவைகளை பூர்த்தி செய்ய தக்க அறிவுரைகளை சம்பந்தபட்ட துறைக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : election ,Plus 2 ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்