வள்ளியூர் பகுதியில் வேகமாக பரவுகிறது மர்மகாய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி

வள்ளியூர், பிப். 28:  வள்ளியூர் அம்பேத்கர் நகர், ஊற்றடி, யாதவர் தெற்கு புதூர், நடுத்தெரு, புதுத்தெரு ஆகிய பகுதிகளில் மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊற்றடியை சேர்ந்த சிந்தியா மகள் முபேஷா (7), காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 3 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட 10க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சாக்கடைகளில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தெருக்களிலும் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி உள்ளன. இதனால் அவை கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாகி மாறி பல்வேறு நோய்களை பரப்புகின்றன. காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவோர் கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. நடக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே எங்கள் பகுதியில் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தி சாக்கடை அடைப்புகளை நீக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: