சூரியசக்தி மின்வேலி அமைக்க 100% மானியம்

தென்காசி, பிப். 28: தென்காசியில், மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, கோட்டாட்சியர் பழனி குமார், வேளாண்மை துறை இணை இயக்குநர் கிருஷ்ணபிள்ளை, நேர்முக உதவியாளர் அசோக் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேளாண் அதிகாரிகள் உள்ளிட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஜாகீர் உசேன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். யானைகளின் தொடர் அட்டகாசத்தை  நீக்க மாவட்ட வன அலுவலகத்தை தென்காசியில் அமைக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தொடர் வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சூரியசக்தி வேலி அமைக்க 100 சதவீத மானியம் வழங்க வேண்டும். மேக்கரை எருமை சாடி ஆற்றை ஆக்கிரமித்துள்ள  தனிநபர் செயற்கை அருவியின் மூலம் நீர்  மாசுபடுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி அளித்துள்ள மனுவில்,  மாவட்டம் முழுவதும் அரசு புறம்போக்கு குளம், கால்வாய்களை தாசில்தார் தலைமையில் குழு அமைத்து கணக்கிட்டு தகவல் பலகையில் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புளியங்குடி திருவேட்டநல்லூரை சேர்ந்த மணிகண்டன் அளித்துள்ள மனு: திருவேட்டநல்லூர் கிராமத்தில் கலியங்குளம் பாசனத்திற்குட்பட்ட நெற்பயிர்கள், தண்ணீரின்றி கருகியுள்ளன. இற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முந்தல் பகுதியில் உள்ள மண்மேடுகளை அகற்ற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

அறுவடை செய்யப்பட்டுள்ள மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்க தென்மண்டல  அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் மனு அளித்தார். முன்னதாக விவசாயிகளின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மினிடிராக்டர்களை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.

Related Stories: