உள்ளாட்சித்துறை பற்றி எளிதில் அறிந்துகொள்ள ஊராட்சி உறுப்பினர்கள் 3,408 பேருக்கு கையேடு

திருச்சி, பிப்.28: திருச்சி மாவட்டத்தில் உள்ள 3,408 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேவையான வழிகாட்டி கையேடு சென்னையிலிருந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தது. தமிழக முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்து, தேர்வான பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 404 பஞ்சாயத்துகளில் (ஊராட்சி) 3,408 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வான ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்து அறிந்துகொள்வதற்காக தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூன்று விதமான வழிகாட்டி கையேடுகளை தயாரித்துள்ளது. முதல் கையேட்டில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்தும், 2வது கையேட்டில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் திட்டங்கள் குறித்தும், 3வது கையேட்டில் தமிழக அரசின் பல்துறைகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 3,408 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு பாகத்திலும் 3,408 பிரதிகள் சென்னையிலிருந்து அச்சாகி திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தன. அவை திருச்சி ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ளன. விரைவில் அந்தந்த யூனியன்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து இந்த கையேடுகள் மற்றும் பை, பேனா, பேடு ஆகியவை வழங்கப்படும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வரலாறு, 73வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 சட்டப்பிரிவுகள் நெறிமுறைகள், கிராம ஊராட்சிக் கூட்டங்கள், கிராம சபை கூட்ட நடைமுறைகள், அதிகாரங்கள் மற்றும் கடமைகள், கிராம ஊராட்சித் துணைத்தலைவர், உறுப்பினர்களின் கடமைகள், ஊராட்சியின் நிலைக்குழுக்கள், தெரு விளக்குகள் பராமரித்தல், குடிநீர் விநியோகம், கிராமப்புறங்களில் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு, கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான பயணப்படி மற்றும் அமர்வுப்படி, ஊராட்சிகளுக்கான வருவாய் இனங்கள், அரசு மானியங்கள், வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் சொத்துக்கள் மற்றும் பராமரித்தல், பணியமைப்பு விதிகள்/ஊராட்சி செயலரின் கடமைகள், ஆய்வாளர்/கலெக்டரின் அதிகாரங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்தும் இந்த கையேடுகளில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் எளிதில் அரசின் செயல்திட்டங்களை புரிந்து கொண்டு அதை மக்களுக்கு செயல்படுத்த முடியும்.

Related Stories: