மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க ₹6 கோடியில் கட்டிடம்

விழுப்புரம்,  பிப். 28: விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை  பாதுகாப்பாக வைக்க ரூ.6 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. உலகின்  மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில்  வாக்குச்சீட்டு முறைகள் ஒழிக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்த  மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக  உள்ளது. தொடர்ந்து வரும் மக்களவை, சட்டமன்றத்தேர்தல்,  உள்ளாட்சித்தேர்தல்களினால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில்  பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்பட்டு, காவல்துறை பாதுகாப்பும்  போடப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும், வெளிமாநிலங்களில்  தேர்தலின்போது மின்னணு இயந்திரங்களை அனுப்பி

வைப்பதும், பின்னர் அங்கிருந்து நமக்கு தேர்தலின்போது  கொண்டுவரப்பட்டு பாதுகாப்புடன் வைப்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த வாக்குப்பதிவு  இயந்திரங்களுக்கென்று தனிகட்டிடம், குடோன் கிடையாது. அரசுக்குசொந்தமான  நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் வாக்குப்பதிவு  இயந்திரங்கள் இருப்பு வைக்கப்படுகின்றன.

அதேபோல், தேர்தலின்போது  பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் ஓராண்டுக்கு மேல் இந்த குடோனில்  பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. இதற்காக, மாவட்ட நிர்வாகம்  வாணிபக்கழகத்திற்கு, குடோன் வாடகையை செலுத்தி வருகிறது. இந்த செலவினத்தை  தேர்தல் ஆணையத்திற்கு குறைக்கும் வகையிலும், அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில்  வைக்கும் வகையில் சொந்தமான கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் சொந்தமாக கட்டிடம்  கட்டப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு,  பெருந்திட்ட வளாகத்தில் இடம்ஒதுக்கி ரூ.6 கோடி மதிப்பில்  புதிய கட்டிடம் கட்டும்பணி தொடங்கி நடந்துவருகின்றன. 1,434 சதுரஅடியில் இரு  தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. முகப்பில் அலுவலக அறையும், மீதமுள்ள  பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் வைக்கக்கூடிய பெரிய  அறைகளாகவும், லிப்ட் வசதியுடன் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த அறையில் 5  ஆயிரம் முதல் 10 ஆயிரம் எண்ணிக்கையிலாள மின்னணு வாக்குப்பதிவு சாதனங்களை  வைக்க முடியும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில்  உள்ள 11 சட்டமன்றத்தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு  இயந்திரங்கள் புதியகட்டிடத்தில் வைக்கப்பட உள்ளன. அனைத்துத்துறை  அலுவலகத்தையும் உள்ளடக்கிய பெருந்திட்ட வளாகத்தில் இந்தகட்டிடம் அமைவதால்  தேர்தல்தொடர்பான பயிற்சி அளித்தல், மின்னணு சாதனங்களை பழுதுநீக்குதல்,  பராமரித்தல், பாதுகாப்பு போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ளமுடியும் என்று  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டிற்குள் பணிகள் முடிக்கப்பட்டு  மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: