×

1,35,696 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கல்

சேத்தியாத்தோப்பு, பிப். 28:    சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூரில் மனு நீதி முகாம் நடந்தது. கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புவனகிரி எம்.எல்.ஏ., சரவணன், சிதம்பரம் சப்- கலெக்டர் விசுமகாஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னலூர் ஊராட்சி தலைவர் பிரபுதாஸ் வரவேற்றார். கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் சார்பு நீதிபதி ஜோதி, புவனகிரி தாசில்தார் சுமதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மகாலட்சுமி வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அனிதாபொய்யா மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளாண்துறை மற்றும் கால்நடை, மருத்துவத்துறைகளில் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக பேசினர். முகாமில் சரவணன் எம்.எல்.ஏ.,  கலெக்டர் அன்புச்செல்வனிடம், கிடப்பில் போடப்பட்டுள்ள விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை சாலை பணியை துவங்கி விரைந்து முடிக்க வேண்டும். முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ள சேத்தியாத்தோப்பில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொதுமருத்துவமனையாக்க வேண்டும். நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு போதுமான தொகை மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் சாலை பணியை துவங்கவும், இனிவரும் காலங்களில் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் கையகப்படுத்தும் நிலங்களுக்கு  ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 15 லட்சம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

முகாமில் பின்னலூரில் பொதுமக்களிடம் இருந்து 294 மனுக்கள் பெறப்பட்டதில், 234 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. விவசாயம், மகளிர் சுய உதவிக்குழு, கால்நடை பராமரிப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா என ரூ. 42 லட்ச மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது. மேலும், கலெக்டர் அன்புச்செல்வன் தமிழகத்திலே கடலூர் மாவட்டத்தில் மட்டும் தான் 1 லட்சத்து 35 ஆயிரத்து 696 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முகாமில், வேளாண், கால்நடை, மின்துறை மற்றும் வருவாய் அலுவலர் செல்வலட்சுமி, வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சில தினங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பொதுப்பணித்துறை கட்டுபாட்டுப் உள்ள 25 கண்மாய் பாலத்தில் குவிந்துள்ள மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக செய்தி வந்துள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன் கலெக்டர் அன்புச்செல்வனிடம் சுட்டிக் காட்டி கோரிக்கை விடுத்தார்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி