×

வடலூர் அருகே டாஸ்மாக் கடையால் தொடரும் விபத்துகள்

நெய்வேலி, பிப். 28: டாஸ்மாக் கடையால் விபத்துகள் தொடர்வதால், கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். வடலூர் அடுத்த சிப்காட் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு மதுபான கடையை கொண்டு வந்தது. இந்த மதுபான கடை வடலூரில் இருந்து மந்தாரக்குப்பம் செல்லும் சாலை வீணங்கேனி பாலம் சிப்காட் பின்புறம் அமைந்துள்ளது. இந்த டாஸ்மார்க் கடை அருகே பத்துக்கும் மேற்பட்ட சிப்காட் நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பார்வதிபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் கடையின் அருகில் வசித்து வருகின்றனர். இந்த மதுபான கடைக்கு செல்ல பாதை இல்லாததால் சுரங்கத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் உபரி நீர் வாய்க்காலை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மண் அடித்து புதிய சாலையை அமைத்துள்ளனர்.  டாஸ்மாக் கடையின் அருகில் அரசு அனுமதி இல்லாமல் பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் குடிமகன்கள் குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் கடலூர்-சேலம் சாலை சிப்காட் பகுதியை கடக்கும்போது குடிமகன்கள் தொடர் விபத்துகளில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.

மேலும் டாஸ்மாக் கடையில் அரசு அனுமதிக்கும் நேரத்தை விட நள்ளிரவு வரை கடைகளிலும், பார்களிலும் தாராளமாக மது கிடைப்பதாலும், ஒதுக்குப்புறங்களில் நள்ளிரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு அப்பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் மாலை நேரங்களில் அவ்வழியே செல்லும் சிப்காட் பெண் தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சாலையை கடக்கும் போது குடிமகன்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி வடலூர் சிப்காட் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accidents ,Task Shop ,Vadalur ,
× RELATED உளுந்து அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி மாணவி படுகாயம்