×

மண்ணின் தன்மையை பொறுத்தே பயிர் மகசூல் அதிகரிக்கிறது

அவிநாசி,பிப்.28:திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பொங்கலூரில் செயல்படும் மத்திய அரசின் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் ஆனந்தராஜா மற்றும் மண்ணியல் துறை வல்லுனர் தனசேகர பாண்டியன் ஆகியோர் கூறியதாவது; மண் வளம் மற்றும் பயிர் மகசூல் அதிகரிப்பு ஆகியவை, மண்ணின் தன்மையை பொறுத்தே அமைகிறது. ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால், மண்ணின் புவியியல் தன்மை, ரசாயனம் மற்றும் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு, மண் நலம், வளம் சீர்கெட்டு வருகிறது. மண் வளம் மேம்பட மண்ணிலுள்ள அங்ககக் கரிமத்தின் அளவை அதிகரிக்க செய்ய வேண்டும். மண் ஆய்வின்படி, பயிர்களுக்கு சமச்சீர் உரமிட வேண்டும். உயிர் உரம், பசுந்தாள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த உர நிர்வாகம், மண் மூடு பயிர்களின் பயன்பாடு, பயிற்சி சுழற்சி முறைகள், மண் அரிமானத்தை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். உயிர் உரங்கள், மண்ணில் நிலைத்து நின்று, மண் வளத்தை பாதுகாக்கும். அங்கக சத்தின் அளவு, 2-3 சதவீதம் வரை, இருக்க வேண்டும். ஆனால் வெப்பமண்டல நிலங்களில்,இச்சத்து 0.05 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

தமிழகத்தில் உள்ள மண் வகைகளில் கடந்த 1970களில், கரிம அளவு விகிதம் 0.80 சதவீதம் வரை இருந்தது. தற்போது, 0.41 சதவீதமாக குறைந்திருக்கிறது.எனவே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீண்டகால உர பரிசோதனை முடிவின்படி, அங்கக உரங்களை ஆண்டுதோறும் இட்டால் மட்டுமே, மண்ணில் அங்கக கரிம வளத்தை மேம்படுத்த முடியும். எனவே, அதிகளவு இயற்கை மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்தி, நிலத்தில், அங்கக மற்றும் கரிம சத்தின் அளவை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.இதன் மூலம், நிலத்தில் நீர் ஊடுருவிச் செல்லும் திறன் அதிகரிக்கும். மண்ணில் ஈரப்பதம் நிலைத்து நிற்கும்.மண்ணின் பரும அடர்த்தி, கட்டமைப்பு மேம்படுத்தப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு