×

அமராவதி ஆற்றின் குறுக்கே நடைபாலம் அமைக்க கோரிக்கை

உடுமலை,பிப்.28:குமரலிங்கத்தில் இருந்து ருத்ராபாளையம் செல்லும் வழியில், இடையில் அமராவதி ஆறு செல்கிறது. ஆற்றுக்கு மறுகரையில் ஆத்தூர், மாரக்காபாளையம், பூளவாடி புதூர் உள்ளிட்ட 8 கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம், காவல்நிலையம் மற்றும் அரசுப் பள்ளிக்கு செல்ல வேண்டுமானால், பேருந்தில் கொழுமம் சென்று அங்கிருந்து குமரலிங்கத்துக்கு வரவேண்டி உள்ளது. இதனால் 8 கி.மீ. சுற்றி வரும் நிலை உள்ளது. அமராவதி ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ள காலங்களில், நடந்தே ஆற்றைக்கடந்து வருகின்றனர். இதனால் 2 கி.மீ. தூரத்தில் குமரலிங்கத்தை அடைய முடியும். தற்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளதால் பொதுமக்கள் ஆற்றைக்கடந்து வருகின்றனர். சைக்கிளில் வருவோர், சைக்கிளை தூக்கி சுமந்துகொண்டு வருகின்றனர்.

அமராவதி ஆற்றின் குறுக்கே நடைபாலம் கட்டினால், தண்ணீர் அதிகம் செல்லும் காலங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக இருக்கும். இதன்மூலம் 8 கி.மீ. சுற்ற வேண்டிய அவசியம் இல்லை. பணமும், நேரமும் மிச்சமாகும். எனவே, குமரலிங்கம்- ருத்ராபாளையம் இடையே ஆற்றின் குறுக்கே விரைவில் நடைபாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Amaravati River ,
× RELATED பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி...