×

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு 2வது சுற்று தண்ணீர் திறப்பு

உடுமலை, பிப்.28:திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு 2-வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பிஏபி பாசன திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் இந்த அணையால் பாசன வசதி பெறுகிறது. நான்கு சுற்றுகளாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

முதலாம் மண்டல பாசனத்துக்காக கடந்த ஜனவரி 24-ம்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 4 சுற்றுகளாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் சுற்று தண்ணீர் 21 நாட்களுக்கு திறக்கப்பட்டு, அடைக்கப்பட்டது. தற்போது, உரிய இடைவெளிக்குப்பின் 2-வது சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நான்கு சுற்றுகளிலும் மொத்தம் 7600 மில்லியன் கன அடி திறக்கப்பட உள்ளது.இதன்மூலம் 94,521 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை நீர்மட்டம் குறைந்துவரும் நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Thirumurthi Dam ,
× RELATED மண் மேடாக காட்சி அளிக்கும் கிழக்கு...