மாநகரில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்கள்

கோவை, பிப்.28: கோவை மாநகரில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களில் மறைமுக பாலியல் அழைப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைகின்றனர். கோவையில் நாளுக்கு நாள் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றன. இதனை தடுப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்தாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதனைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் கோவை மாநகரில் மசாஜ் சென்டர்கள்  அனுமதியின்றி இயங்கி வருவதாக சமீப காலமாக அதிகளவில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எனவே போலீசார் இதனை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாநகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மொத்தம் 85க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் உரிய அனுமதி பெற்று லைசென்ஸ் பெறப்பட்டு கிட்டத்தட்ட 15 மசாஜ் சென்டர்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மற்ற மசாஜ் சென்டர்கள் போலீசாரின் எந்த கெடுபிடியும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுகின்றன.

அனுமதியுடன் இயங்கும் மசாஜ் சென்டர்களில் ஆயுர்வேதிக் மசாஜ், ஆயில் மசாஜ் மற்றும் மூலிகை மசாஜ் உள்ளிட்டவை சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக குறிப்பிட்ட மசாஜ் சென்டர்கள் வாடிக்கையாளர்களை கவர விளம்பாம் செய்து வருகின்றன. கோவை நகரை பொறுத்தவரை காந்திபுரம், பீளமேடு, ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், குனியமுத்தூர், சிங்காநல்லூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் உரிய அனுமதியின்றி லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. வீடுகளை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றனர். அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு சந்தேகம் வராதபடி வீட்டின் உள்ளே அலுவலகம் நடத்துவதுபோல் மேஜை மற்றும் ஷோபாக்கள் போடப்பட்டுள்ளன. இங்கு அடிக்கடி இளம்பெண்கள் வந்து சென்றாலும் வேலைக்கு வந்து செல்கின்றனர் என அருகில் வசிப்பவர்கள் சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர். அவர்கள் அங்கேயே தங்குவதில்லை. இன்னும் சில வீடுகளில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் நேபாளம், பீகார், திரிபுரா, ஒடிசா, போன்ற வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும் இளம்பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தங்குகின்றனர். அவர்களுக்கு புரோக்கராக செயல்படும் நபர்கள் மட்டும் ஆள்பிடிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை நோட்டமிட்டு அங்கு வரும் வாலிபர்களை நைசாக பேசி ஆசை வார்த்தை கூறி மசாஜ் சென்டருக்கு அழைத்து செல்கின்றனர். அவ்வாறு அழைத்து வரப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஆயுர் வேதிக் மசாஜ், ஆயில் மசாஜ், மூலிகை மசாஜ் ஆகியவற்றுக்கு ஒரு கட்டணமும், இளம்பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க ஒரு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இங்கு ஒருமுறை செல்லும் சிலர் தனது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி அழைத்து செல்வதால் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபடும் இடங்களில் வாடிக்கையாளர்கள் எப்போதும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இதனை களைய வேண்டிய பொறுப்பில் உள்ள ஒரு சில போலீசாரே வாடிக்கையாளர்களாக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மசாஜ் சென்டரில் ஆயில் மசாஜ் மற்றும் மூலிகை மசாஜ் மட்டுமே செய்யப்படுகிறது என நினைத்து செல்லும் சில இளைஞர்களை அங்குள்ளவர்கள் மறைமுக பாலியல் அழைப்பு விடுத்து அவர்களிடம் கூடுதல் பணத்தை அபகரித்து விடுகின்றனர். தட்டிக்கேட்டால் அங்குள்ள குண்டரகளால் மிரட்டப்படுகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதுமில்லை. அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் நடத்துபவர்கள் கவனிக்க வேண்டியவர்களை முறையாக கவனித்து விடுகின்றனர். இதனால் எந்தவித இடையூறும் இன்றி செயல்படுகிறது இந்த மசாஜ் சென்டர் தொழில். எனவே இதனை கணக்கெடுத்து களைய வேண்டிய பொறுப்பு உயர் அதிகாரிகளின் கையில்தான் உள்ளது என விவரம் அறிந்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: